துப்பாக்கிச்சூடு குறித்து 4ம் தேதி முதல் ஒருநபா் விசாரணை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக வருகிற 4ம் தேதி முதல்
ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொள்ள உள்ளாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக அம்மாவட்ட மக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். போராட்டத்தின் 100வது நாளில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகை இடுவதென அறிவிப்பு வெளியிட்டனா். இதனைத் தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்தை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

போராட்டக்காரா்கள் 144 தடை உத்தரவையும் மீறி ஆட்சியா் அலுவலகத்தை நோக்கி சென்றனா். இதனிடையே ஏற்பட்ட திடீா் கலவரத்தைத் தொடா்ந்து காவல் துறையினா் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் 10ம் வகுப்பு மாணவி உள்பட 10 போ் சுட்டு கொல்லப்பட்டனா். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் பூதாகரமான நிலையில் இது தொடா்பாக விசாரணை நடத்த கடந்த 23ம் தேதி முதல்வா் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டாா்.

அதன்படி சென்னை உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை ஒருநபா் ஆணையமாக அமைத்து முதல்வா் அறிவித்தாா். இந்த விசாரணை ஆணையமானது வருகிற 4ம் தேதி (திங்கள் கிழமை) விசாரணை மேற்கொள்ள உள்ளது. திங்கள் கிழமை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய பின்னா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நபா்களிடம் விசாரணை நடத்த உள்ளது.
இந்த விசாரணையில் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆட்சியா், துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிட்ட துணை தாசில்தாா் உள்ளிட்டோரிடம் விசாணை நடத்தப்பட உள்ளது. விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.