மும்பை விமான விபத்து: 5 பேர் பலி!

மும்பை காட்கோபர் பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.


உத்தரப் பிரதேச மாநில அரசாங்கத்திற்கு சொந்தமாக இருந்தது பீச்கிராஃப்ட் கிங் ஏர் சி – 90 ரக விமானம். கடந்த 2015ஆம் ஆண்டு ‘ஏஒய்’ என்ற தனியார் ஏவியேசன் நிறுவனத்திற்கு இந்த விமானம் விற்கப்பட்டிருந்தது.

இன்று (ஜூன் 28) நண்பகலில் ஜூஹூ விமான நிலையத்தில் பீச்கிராஃப்ட் கிங் ஏர் சி – 90 ரக விமானத்தின் சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது இரண்டு விமான ஓட்டிகளும், இரண்டு பொறியாளர்களும் அந்த விமானத்தில் இருந்தனர்.

விமானம் தரையிறங்க முயலும்போது, காட்கோபரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் இன்று நண்பகல் பலத்த சத்தத்தோடு கீழே விழுந்து திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இதில், பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் அங்கு சென்று கொண்டிருந்த பாதசாரி ஒருவரும் இறந்துள்ளார். மேலும் இருவர் காயம் அடைந்துள்ளனர். முதல் சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.

முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் சம்பவ இடத்தை பார்வையிட்டுள்ளார். இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், “மும்பை விமான விபத்து குறித்து அறிந்து கவலை அடைந்துள்ளேன். அதிகாரிகளை அது குறித்து விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறேன். அங்குள்ள நிலவரம் குறித்து தொடர்பில் இருக்கிறேன்” என கூறியிருக்கிறார்.

விமானத்தின் கறுப்புப்பெட்டி கிடைத்திருப்பதால் அதன் மூலம் மேலதிக விசாரணை செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments

Powered by Blogger.