எட்டு வழிச் சாலை: மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவு!

சென்னை - சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசுகள் விளக்கம் அளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர் ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்

அதில், பொதுமக்களின் நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக 2013 ஆம் ஆண்டு மத்திய அரசு "நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறு வாழ்வு, மறு குடியமர்வு மற்றும் நிலம் கையகப்படுத்தலில் வெளிப்படைத்தன்மை" சட்டம் கொண்டு வந்தது.

அதன்படி, நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக அறிவிப்பாணை வெளியான 21 நாட்களுக்குள் மக்கள் ஆட்சேபணை தெரிவிக்கலாம் என்ற விதி இருக்கிறது இருந்தபோதிலும் மக்களின் கருத்தை கேட்காமலேயே நிலம் கையகப்படுத்தும் பணியை அரசு மேற்கொள்வதாகத் தனது மனுவில் தெரிவித்திருந்தார். மேலும் 2013ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத்தில் உள்ள பிரிவு 105இன் படி, இந்தச் சட்டத்தின் அம்சங்கள் எதுவும் தேசிய நெடுஞ்சாலை சட்டத்திற்குப் பொருந்தாது எனக் குறிப்பிட்டிருப்பது மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமையைத் தடுப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த மனு இன்று (ஜூன் 28) நீதிபதி சிவஞானம் மற்றும் நீதிபதி சேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், “2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நெடுஞ்சாலை சட்டம் 105ஆவது பிரிவை ரத்து செய்ய வேண்டும் ஏனென்றால் இந்தச் சட்ட பிரிவின்படி நெடுஞ்சாலைக்காக நிலங்களைக் கையகப்படுத்தும்போது 105ஆவது பிரிவின் படி எந்தக் கருத்தையும் மக்களிடம் கேட்கத் தேவையில்லை என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தால் ஏற்படும் சமூக பாதிப்பு பற்றிய ஆய்வு அறிக்கை தேவையில்லை என்ற நிலைப்பாடு தவறானது. எனவே 105ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்

மத்திய அரசு சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் , “2015ஆம் ஆண்டு மத்திய அரசு ஒரு அறிவிப்பாணை வெளியிட்டது அதில் நெடுஞ்சாலைக்காக நிலத்தைக் கையகப்படுத்தும்போது மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது அது மட்டுமில்லாமல் இந்த மனுவைத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு அதிகாரம் இல்லை என்றும் இந்தத் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்தான் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இதனைப் பொதுநல வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது” எனவும் வாதிட்டார்.

தமிழக அரசு சார்பாக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி , நிலத்தின் உரிமையாளருக்கு நிலத்தின் மதிப்பை விட மூன்று மடங்கு இழப்பீடு தொகை வழங்கப்படவுள்ளது எனவே இந்தச் சட்ட பிரிவை எதிர்த்து மனு தாக்கல் செய்வது தேவையற்றது என்று வாதிட்டார்

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக மத்திய மாநில அரசுகள் வரும் ஜூலை 12ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.
Powered by Blogger.