தமிழகத்துக்கு பாதிப்பு: எடப்பாடி பழனிசாமி!

டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “15ஆவது நிதிக்குழுவிற்கான வரன்முறைகளால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும்” என்று தெரிவித்தார்.


நிதி ஆயோக்கின் நான்காவது ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று (ஜூன் 17) கூடியது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநர்கள் உட்படப் பலரும் இதில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “ ஒவ்வொரு மாநிலமும் கலாச்சார ரீதியாக, சமூக ரீதியாக வேறுபாடு உடையவை. அவற்றின் வளர்ச்சி தேவை என்பது வெவ்வேறு விதமாக இருக்கும். உள்ளூர் நிலை மற்றும் தேவையை பொறுத்தே மாநில அரசுகளின் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. எனவே, புதிய இந்தியா 2022 என்பது அவசியம் மாநிலங்களின் முன்நோக்கு திட்டங்களால் கட்டப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேலும், மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளின் நீரை தமிழகம் சார்ந்து இருப்பதாகக் குறிப்பிட்ட முதல்வர், “காவிரி நதி நீர் ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை உடனடியாக செயல்பாட்டுக்கு வர வேண்டும். மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளை இணைக்க வேண்டுமானால் அவற்றை தேசியமயமாக்க வேண்டும். மகாநதி- கோதாவரி- கிருஷ்ணா- பாலாறு- காவிரி- வைகை- குண்டாறு நதிகளை இணைக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

15ஆவது நிதிக்குழு தொடர்பாகப் பேசுகையில், “14ஆவது நிதி குழு கொள்கையால் ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 15ஆம் நிதிக்குழுவிற்கான ஒரு சில வரன்முறைகளில் திருத்தம் மேற்கொள்ளவில்லை என்றால் அதுவும் எங்களுக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும். நிதி இழப்பைத் தவிர்க்க 2011ஆம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாகக் கொள்ள கூடாது” என்று வலியுறுத்தினார்.

மகாத்மா காந்தி பெயரில் ஆண்டுதோறும் ‘காந்தி பசுமை பூமி விருது’ வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த அவர், “தமிழகத்தில் உள்ள காந்திகிராம் பல்கலைக்கழகத்தை மத்திய அரசு பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும். மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்துக்கு ரூ. 10 கோடி நிதி கூடுதலாக வழங்க வேண்டும். விருதுநகர் மற்றும் ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க வேண்டும். விருதுநகரில் மாநில அரசு நிதியில் அமையவுள்ள பல்மருத்துவ கல்லூரிகள் பல்மருத்துவ கவுன்சில் மற்றும் சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்க வேண்டும்” என்று பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், “கூட்டத்தில், ஜெயலலிதாவின் விஷன் 2023 திட்டத்தை இந்தியா 2022 திட்டத்துக்கு வழிகாட்டியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினேன். விவசாயிகள் வளம் பெற நவீன முறையில் வேளாண் விற்பனை கூடங்களை மேம்படுத்தக் கூடுதல் நிதி வழங்கிட கோரியுள்ளோம். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நீர் மேலாண்மை பணிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது பற்றியும் குடிமராமத்து பணிகள் குறித்தும் தமிழக அரசு சார்பில் விளக்கப்பட்டது. ஊட்டச்சத்து மற்றும் தடுப்பூசி திட்டம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

பிரதமருடன் தனிப்பட்ட சந்திப்பு எதுவும் கிடையாது என்றும் குறிப்பிட்ட அவர், “தூத்துக்குடிக்கு துணை முதல்வர் உள்ளிட்ட பலரும் நேரிடையாக சென்று தேவையான உதவிகளைச் செய்துள்ளனர். அம்மாவட்ட அமைச்சரும் அடிக்கடி சென்று மக்களைச் சந்தித்துள்ளார். வாழ்வாதார போராட்டங்களை காவல்துறை மூலம் தமிழக அரசு முடக்குகிறது என்பது தவறான கருத்து” என்று கூறினார்.
Powered by Blogger.