ஆழம் பார்க்கிறார் தினகரன்!

தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெற தங்க.தமிழ்ச்செல்வன் முடிவு செய்துள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், "குரங்கு தன் குட்டியை விட்டு ஆழம் பார்க்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது" என்று கூறியுள்ளார்.


எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் நீதிபதி சுந்தரும் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியதால், வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி இன்னும் நியமனம் செய்யப்படவில்லை. இந்நிலையில் "இறுதியாக நாங்கள் நம்பியிருந்த நீதிமன்றம் எங்களைக் கைவிட்டுவிட்டது, எனக்கு எம்.எல்.ஏ. பதவி வேண்டாம்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள தங்க.தமிழ்ச்செல்வன், விரைவில் நீதிமன்ற வழக்கிலிருந்து தன்னுடைய மனுவைத் திரும்பப் பெறப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை உறுதிப்படுத்தியுள்ள தினகரன், மற்ற 17எம்.எல்.ஏ.க்களும் வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் , "தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி வழங்கியுள்ள தீர்ப்பு என்பது அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியது. மாறுபட்ட கருத்தை மற்றொரு நீதிபதி வழங்கியுள்ள நிலையில், வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்கும் பட்சத்தில் தங்க.தமிழ்ச்செல்வன் வாபஸ் வாங்குகிறேன் என்று மனு அளித்தால், அது குறித்து நீதிமன்றம்தான் முடிவெடுக்க முடியும். இதில் நான் ஏதும் கூற முடியாது.

ஆனால், அரசியல் ரீதியாகக் கருத்து கூற முடியும். அதனடிப்படையில், குரங்கு தன் குட்டியை விட்டு ஆழம் பார்க்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. மண்குதிரையை நம்பி ஆழம் பார்த்த கதையாக அங்கும் தற்போது பிரச்னை ஏற்பட்டுவிட்டதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலை குறித்துப் பேசிய அமைச்சர், "ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில், ஏழு பேரின் விடுதலை குறித்த தமிழகத்தின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறி, விடுதலை செய்யத் தேவையான அத்தனை வாதங்களையும் முன்வைப்போம்" என்றும் குறிப்பிட்டார்.

மேலும், "ஜெயலலிதாவின் சிலை வடிவமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. சிலை முழுமையாக வடிவமைக்கப்பட்ட பின்பு, பத்திரிகையாளர்களுக்கு அது குறித்த தகவல் தலைமைக் கழகத்திலிருந்து தெரிவிக்கப்படும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.