முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை 18 !

முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லையை 18 ஆக தீர்மானிக்க வேண்டும் என முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்ட மறுசீரமைப்புத் தொடர்பான பெண்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
பெண்களுக்கான கற்கைகள் மற்றும் ஆய்வு நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக அங்கு சட்டத்தரணி சபானா பேகம் கருத்துத் தெரிவிக்கையில், “உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூக் அவர்களால் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தினை மறுசீரமைத்தல் தொடர்பான அறிக்கை அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பாக நாளை முஸ்லிம் நாடாளுமன்ற அமைச்சர்கள் குறித்த விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் தொடர்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக நாம் அறிந்துள்ளோம்.

முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்காகவும் மறுசீரமைப்பிற்குமாக உழைக்கும் பெண்கள் அமைப்புக்களாகிய நாம் நீதியரசர் சலீம் மர்சூக் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தினை மறுசீரமைத்தல் தொடர்பான அறிக்கையை ஏற்றுக் கொள்கின்றோம்.

பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் நாம் தெரிவிக்கும் அல்லது வெளியிட்டிருக்கும் எந்தக் கருத்தாயினும் ஷரியா சட்டத்திற்கு முரணாக காணப்படவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

எமது அறிக்கையில் உள்ளடங்கியுள்ள சிபாரிசுகள் அனைத்தும் ஷரியாவிற்கு உட்பட்டதாகவே அமைந்துள்ளதுடன் ஒரு நாட்டின் சட்டமானது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தருவதாக அமைய வேண்டும்.

எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினையும் நிவாரணத்தினையும் தரக்கூடிய வகையிலேயே நாம் எமது சிபாரிசுகளை முன்வைத்திருக்கின்றோம்.

இந்நிலையில் ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தீர்மானத்திற்காக குறித்த மறுசீரமைப்புக் கையளிக்கப்பட்டுள்ளமையானது எமது உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் விடயமாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.


No comments

Powered by Blogger.