மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும்!

நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகவும் மைத்திரிபால சிறிசேன வரவேண்டும் என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மாகாணசபைத் தேர்தல் நடத்துவது என்பது நாடாளுமன்றின் பொறுப்பாகும். உள்ளுராட்சி மற்றும் மாகாணசபை அமைச்சர் என்னும் வகையில், எனது பிரதான கடமையான எல்லை நிர்ணயத்தை மேற்கொண்டு அதன் அறிக்கையையும் சபையில் சமர்பித்து விட்டேன்.

இந்த நிலையில், மாகாணசபைத் தேர்தலை எப்போது நடத்துவது என்பதை நாடாளுமன்றின் 225 உறுப்பினர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

அதேநேரம், நாட்டின் தற்போதைய நிலைமையைப் பொறுத்தமட்டில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வெற்றி பெற வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

ஏனெனில், இவர் ஒருவர் தான் அனைத்து மக்களையும் நல்லிணக்கத்தால் இணைத்த தலைவராக இருக்கிறார். எனவே, எமது கட்சியின் இந்தத் தலைவரே மீண்டும் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.