திருவண்ணாமலை கோவிலில் 2 சிலைகள் மாயம்!

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் இருந்த இரண்டு சிலைகள் மாயமாகியுள்ளது. இதுகுறித்து கோவிலின் இணை ஆணையர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் பத்து நாட்கள் ஆனி பிரம்மோற்சவம் நடைபெறும். இந்த பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் (ஜூலை 8) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. அண்ணாமலையார் கோவிலில் இருக்கும் சிலைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுவந்தது.
இந்தக் கோவிலில் பஞ்சலோகம், பித்தளை, தாமிரம் உள்ளிட்ட உலோகங்களினால் ஆன, நடராசர், சோமாஸ்கந்தர், விநாயகர் உள்ளிட்ட சிலைகள் உள்ளன. கடந்த ஒரு மாத காலமாக சிலைகள் மற்றும் ஆபரணங்கள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
கணக்கெடுப்பின்போது, ஒன்றேகால் அடி உயரம் கொண்ட தண்டாயுதபாணி சிலையும், முக்கால் அடி உயரம் கொண்ட பித்தளை சூலம் ஆகிய இரண்டு பித்தளை சிலைகளையும் காணவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில், திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.
தமிழகத்தில் உள்ள பழங்கால கோவில்களில் இருக்கும் சிலைகள் காணாமல்போவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு வருகின்றனர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழு. இந்நிலையில், இரண்டு சிலைகள் காணாமல் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.