புல்லெட் ரயில் திட்டத்தை எதிர்க்கும் கோத்ரேஜ்!

தங்களது நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தைக் கைப்பற்றுவதற்குத் தடை விதிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தை கோத்ரேஜ் குழுமம் நாடியுள்ளது.

மத்திய மோடி அரசின் கனவுத் திட்டங்களில் ஒன்றான புல்லெட் ரயில் திட்டத்தில் ஜப்பான் அரசின் உதவியுடன் ரூ.1.1 லட்சம் கோடி செலவில் இந்தியாவில் 508 கிலோ மீட்டர் அளவு புல்லெட் ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இந்த ரயில் பாதையானது குஜராத், மகாராஷ்டிரா, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகிய பகுதிகளின் 866 ஹெக்டேர் நிலப்பரப்பைக் கடந்து செல்லும். அந்த வழித்தடத்தில் உள்ள சுமார் 312 கிராமங்கள் இத்திட்டத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தமிழகத்தில் பசுமை நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்கு அப்பகுதியைச் சேர்ந்த கிராம வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதைப் போலவே இந்த புல்லெட் ரயில் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிக்கும் பல்வேறு எதிர்ப்புகள் மக்களிடையே கிளம்பியுள்ளன.
இத்திட்டத்தால் சுமார் 6,000 பேர் பாதிக்கப்படுவார்கள் என தேசிய அதிவேக ரயில் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஸ்க்ரால் ஊடகத்திடம் கூறியுள்ளார். அதுபோல, வல்சாத் மாவட்டத்தில் மட்டும் 1,695 குடும்பங்கள் இத்திட்டத்தால் பாதிக்கப்படுவார்கள் என்றும் இந்த நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது. இது ஒருபுறமிருக்க, கோத்ரேஜ் குழுமத்துக்குச் சொந்தமாக மும்பை விக்ரோலி பகுதியில் உள்ள நிலத்தை புல்லெட் ரயில் திட்டத்தின் கீழ் கைப்பற்றுவதற்கு அந்நிறுவனம் எதிர்ப்புத் தெரிவித்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜூலை 9ஆம் தேதி முறையிட்டுள்ளது. கோத்ரேஜ் நிறுவனத்தின் ரூ.500 கோடி மதிப்புடைய இந்தச் சொத்தைக் கையகப்படுத்தத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 31ஆம் தேதி நடைபெறுகிறது.
Powered by Blogger.