ஒரே தொடரில் தகர்க்கப்பட்ட 4 உலக சாதனைகள்!

ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் 4 உலக சாதனைகளுடன், தொடரையும் 5-0 எனக் கைப்பற்றியுள்ளது.

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் 4 போட்டிகளில் பாகிஸ்தான் வென்று தொடரை 4-0 எனக் கைப்பற்றிய நிலையில் ஐந்தாவது போட்டி புலவாயோவில் நேற்று (ஜூலை 22) நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் சேர்த்தது. பாபர் அசாம் 76 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கடின இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் மட்டுமே எடுத்தது. பீட்டர் மூர் 44 ரன்களுடனும், எல்டன் சிகும்பரா 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, பாகிஸ்தான் அணி 5-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை முழுவதும் கைப்பற்றி ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் செய்தது.

தகர்க்கப்பட்ட உலக சாதனைகள்

இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகர் ஜமான், 5 போட்டிகளில் விளையாடி 515 ரன்கள் குவித்திருந்தார். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.அது மட்டுமின்றி ஃபகர் ஜமான், 18 இன்னிங்ஸில் 1000 ரன்களைக் கடந்து, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஆயிரம் ரன்களைக் கடந்தவர்கள் பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

நான்காவது போட்டியில் முதல் விக்கெட்டுக்கு ஃபகர் ஜமான்-இமாம் உல் ஹக் ஜோடி 304 ரன்கள் சேர்த்தது. இதுவே ஒருநாள் கிரிக்கெட்டில் துவக்க ஜோடியின் அதிகபட்ச பாட்னர்ஷிப்பாகும்.

இந்தத் தொடரில் ஃபகர் ஜமான் கடைசி வரை ஆட்டமிழக்காத போட்டிகளில் மட்டும் மொத்தம் 455 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் ஒரே தொடரில் ஆட்டமிழக்காமல் சேர்த்த அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

No comments

Powered by Blogger.