தமிழக போலீஸார் மீது கொலை வெறித் தாக்குதல்கள்!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய தலைமைக் காவலர் செந்தில் குமார் ஜூலை 22ந் தேதி இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தவரை மர்மக் கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பிய சம்பவம் தமிழக காவலர்களை அதிரவைத்துள்ளது.

இரவு ரோந்து பணியென்றால் இரண்டு போலீஸார் செல்வது வழக்கம். போலீஸ் பற்றாக்குறை என்பதால் திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய தலைமைக் காவலர் செந்தில்குமார் மட்டும் தனியாக டூ வீலரில் இரவு ரோந்துப் பணிக்குச் சென்றுள்ளார். நேற்று இரவு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஒரு பைக்குடன் அடையாளம் தெரியாத மூன்று பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் சந்தேகப்படும்படி.இருந்ததால், செந்தில்குமார் அவர்களிடம் விசாரணை செய்துள்ளார். பேட்டரி எதற்கு கையில் வைத்துள்ளீர்கள்? உங்களை விசாரிக்கவேண்டும் என்று காவல் நிலையத்துக்கு அழைத்தபோது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர்,அவர்கள் வந்த டூ வீலர் கீ செயினில் உள்ள சிறு கத்தியால் செந்தில்குமார் கழுத்தில் சரமாரியாக கிழித்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்கள்.

இரவு 2.00 மணிக்குபடுகாயம் அடைந்த செந்தில் குமாரை முண்டியாம்பாக்கம் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த விழுப்புரம் அதிரடி எஸ்.பி.ஜெயக்குமார் போலீஸ் மீது கை வைத்தவனைப் பிடித்து வாருங்கள் என்று தனி டீம் போலீஸாரை அனுப்பினார். போலீஸை தாக்கியவர்கள் பேராங்கியூர் சேர்ந்த மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்பது தெரிந்து ஒருவரை மட்டும் போலீஸ் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.

போலீஸ்மீது தாக்குதல் என்பது இது புதியது அல்ல. கடந்த இரண்டு வருடமாக போலீஸ் மீது அதிகமான தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதுவரை முன்னதாக, எழும்பூர் எஸ்.ஐ சம்பத், இராயப்பேட்டை போலீஸ் கான்ஸ்டபிள் ராஜவேல் , மயிலாப்பூர் எஸ்.ஐ இளையராஜா, பரங்கிமலை போலீஸ் ராஜசேகர் , ரவுடிகளாலும் வழிப்பறிக் கும்பல்களாலும் தாக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் ஜெகதீசன் துரை என்ற காவலரை மணல் கொள்ளையர்கள் கொலை செய்தார்கள். காஞ்சிபுரம் சுங்குவார் சத்திரத்தில் மோகன்ராஜ் என்ற காவலரை ரவுடிக்கும்பல் கொலை செய்தது உட்படக் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

ரவுடிகள், மணல் கொள்ளையர்கள், சமூக விரோதக் கும்பல்கள் ஆகியோரால் போலீஸ் மீது தொடரும் தாக்குதல்களால் தமிழக போலீஸார்கள் கடுமையான மனஉளைச்சல்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்கள் அதிருப்தியிலும் உள்ளதாகத் தெரிவிக்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள்.

No comments

Powered by Blogger.