கட்டிட சாரம் இடிந்து பலியான தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதிஉதவி- முதலமைச்சர் அறிவிப்பு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கந்தன் சாவடியில் தனியாரால் கட்டப்பட்டு வந்த கட்டடம் கட்டும் பணியின் போது, எதிர்பாராத விதமாக 21.7.2018 அன்று சாரம் சரிந்து விழுந்ததில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர் என்ற செய்தி அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

இந்தத் தகவல் கிடைக்கப் பெற்றவுடன், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்டெடுத்து, அவர்களுக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர், பேரிடர் மேலாண்மை ஆணையர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, மருத்துவத் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டேன்.

எனது உத்தரவின் பேரில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டெடுக்க ஏதுவாக, 7 தீயணைப்பு வாகனங்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

மீட்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில், 6 ஆம்புலன்ஸ் வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இடிபாடுகளில் சிக்கியிருந்த கட்டுமானத் தொழிலாளர்களை மீட்டெடுக்கும் பணியிலும்; காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கும் பணியிலும், மாவட்ட நிர்வாகம், தேசிய பேரிடர் மீட்பு குழு, மாநில பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சென்னை மாநகர காவல் துறை, மருத்துவத் துறை, நெடுங்சாலைகள் துறை, பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தேவையான உபகரணங்களுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பப்லு உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் வேதனை அடைந்தேன்.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பப்லு குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இடிபாடுகளில் சிக்கி, காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும் மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த பப்லு குடும்பத்திற்கு ரூ.5லட்சம் தொழிலாளர் நல வாரியத்திலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இச் சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.