61 ஆண்டுகளுக்கு இலங்கைக்கு எதிராக பின் நிகழ்ந்த சாதனை!

தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் கேஸவ் மகராஜ் 9 விக்கெட் வீழ்த்தியபின் பந்தை காட்டி சிகர்களிடம் பகிர்ந்து கொண்ட காட்சி - படம்உதவி: ட்விட்டர்

இலங்கைக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், 61 ஆண்டுகளுக்குப் பின், தென் ஆப்பிரிக்க வீரர் கேஸவ் மகராஜ் ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இலங்கையில் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.

இதில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் நேற்று முதல் நடந்து வருகிறது.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. முதல்நாள் ஆட்டமான நேற்று ஒரேநாளில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் சேர்த்தது.

தென் ஆப்பிரிக்க அணியின் இடது கை சுழற்பந்துவீச்சாளர் கேஸவ் மகராஜ் ஒரே இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்தார்.

இலங்கை அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான குணதிலகா (57), கருணாரத்னே(53), டி சில்வா(60) ஆகியோர் மட்டுமே அரைசதம் அடித்தனர். நடுவரிசை வீரர்களும், கடைசிநிலை வீரர்களும் கேஸவ் மகராஜின் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர்.

104.1 ஓவர்களில் 338 ரன்களுக்கு இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் கேஸவ் மகராஜ் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் கேஸவ் மகராஜின் கிரிக்கெட் வாழ்க்கையில் 9 விக்கெட் வீழ்த்தியது மிகப்பெரிய சாதனையாகும்.

சிறப்பான பந்துவீச்சாகவும் அமைந்தது. தொடக்க நாளில் கேஸவ் மகராஜ் 8 விக்கெட்டுகளையும், 2-வது நாளான இன்று ஒரு விக்கெட் என மொத்தம் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்த கேஸவ் மகராஜின் பூர்வீகம் இந்தியா ஆகும். இவரின் தாய், தந்தை இந்தியாவில் இருந்து தென் ஆப்பிரிக்காவில் குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேஸவ் மகராஜை வாழ்த்தும் சக வீரர்கள்

இதற்கு முன் தென் ஆப்பிரிக்க அணியில் கடந்த 1957-ம் ஆண்டு டேபீல்ட் 113 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை 61 ஆண்டுகளுக்குப் பின் கேஸவ் மகராஜ் சமன் செய்துள்ளார்.

ஆனால், ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்தியதில் இதுவரை இங்கிலாந்து வீரர் ஜிம் லேக்கரும் (53/10), இந்திய வீரர் அணியில் கும்ப்ளே (74/10) ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

இதையடுத்து, முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 124 ரன்களில் சுருண்டது. இலங்கை வீரர்கள் அகிலா தனஞ்செயா 5 விக்கெட்டுகளையும், தில்ருவன் பெரேரா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

தென் ஆப்பிரிக்க அணியில் மூத்தவரும் அனுபவ பேட்ஸ்மேனுமான ஹசிம் அம்லா இந்தப் போட்டியில் 19 ரன்களை எட்டியபோது, சர்வதேச டெஸ்ட் போட்டியில் 9 ஆயிரம் ரன்களை எட்டிய 3-வது தென் ஆப்பிரிக்க வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

முதல் இன்னிங்ஸில் 214 ரன்கள் முன்னிலையுடன் இலங்கை அணி 2-வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 28 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்துள்ளது.

குணதிலகா 61 ரன்களில் வெளியேறினார். கருணாரத்னே 56 ரன்களிலும், மெண்டில் 16 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.