`காவிரி நீர் கடைமடை வரை செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!’ - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 110 அடியைத் தாண்டிவிட்டது. கல்லணையிலிருந்து டெல்டா  மாவட்ட பாசனத்துக்காக  நாளை தண்னீர் திறக்கப்படவுள்ளது. தண்ணீர் திறக்கப்பட்டு அவை வீணாகக் கடலில் கலப்பதை தமிழக அரசு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
கும்பகோணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.அப்போது அவர் பேசுகையில், ``நீண்ட நாள்களாக விவசாயிகள் எதிர்பார்த்து வந்த கல்லணையிலிருந்து டெல்டா மாவட்டப் பாசனத்துக்காக நாளை (22.7.18) தண்ணீர் திறக்கப்பட உள்ளது. ஆனால், தமிழக அரசு தூர் வாரும் பணிகளை முறையாகச் செய்யவில்லை. இருப்பினும், கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு தமிழக அரசு முழுமையாக நடவடிக்கையை இனியும் தாமதிக்காமல் விரைவில் எடுக்க வேண்டும். விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்களை உடனடியாக வழங்க வேண்டும்.


வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், அவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, விவசாயிகளின் வங்கிக் கடன்களை ரத்து செய்வதோடு புதிய கடன்கள் வழங்க வேண்டும். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110 அடியைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. தண்ணீர் திறக்கப்பட்டு, அந்தத் தண்ணீர் கடலில் வீணாகக் கலப்பதைத் தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளுடன் கலந்து பேசி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.