மட்டக்களப்பும் சீனாவுக்கு தாரையாகும் அபாயம்!

மட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் 6 ஆயிரத்து 500 ஏக்கர் காணியை சீனாவுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.


அபிவிருத்தி மற்றும் காணி பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட தளவாயில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. அங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”எங்களது நிலம்சார்ந்த இருப்பு மிகவும் முக்கியமானது. எங்களது நிலங்களை பாதுகாப்பதற்காகவே கடந்த மூன்று தசாப்தங்களாக விலைமதிக்க முடியாத இழப்புகளை; எதிர்கொண்டிருந்தோம். ஆனால், தற்போது நமது நிலம் அபிவிருத்தி எனும் போர்வையில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது

இதேவேளை, படுவான்கரை பகுதியில் 6 ஆயிரத்து 500 ஏக்கருக்கும் அதிகமான காணியை சீனாவிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிய கிடைத்துள்ளது.

அதுமாத்திரமின்றி, படுவான்கரை புல்லுமலை பகுதியில் அப்பகுதி மக்களின் எவடவித அனுமதியும் பெறப்படாமல் அப்பகுதியில் உள்ள நீரை உறுஞ்சி தண்ணீர்ப்போத்தல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையினை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டன. ஆனால் அது தொடர்பில் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார். 
Powered by Blogger.