வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

ஜிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி,
பாகிஸ்தான் இந்தத் தொடரை வெற்றியுடன் துவக்கியுள்ளது.
ஜிம்பாப்வே, பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற இதன் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் ஹாமில்டன் மசகட்ஸா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பாஃகர் ஜமான் 40 பந்துகளில் 61 ரன்களும், ஆசிப் அலி 21 பந்துகளில் 41 ரன்களும், சோயப் மாலிக் 24 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர். ஜிம்பாப்வே சார்பில் டென்டய் கிசோறோ 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17.5 ஓவர்களில் 108 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக தரிசாய் முசாகண்டா 35 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் சார்பில் முகமது நவாஸ், உஸ்மான் கான், ஹசன் அலி, முகமது ஹபீஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தத் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
Powered by Blogger.