யார் இவர்? தேடும் பிரபலங்கள்!

விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற ‘உணைக் காணாத நாள்’ எனத் தொடங்கும் பாடலை முகம் தெரியாத சாதாரண நபர் ஒருவர் மிகத்திறமையாகப் பாடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


முந்தைய காலங்களில் ஒருவர் மீது ஊடக வெளிச்சம் படுவதும், அல்லது ஊடக வெளிச்சம் பட்டவர்களை சந்திப்பதும் அவ்வளவு சாதாரணமாக நிகழ்ந்து விடாது. ஆனால் தற்போதுள்ள டிஜிட்டல் வசதிகளைப் பயன்படுத்தி பலர் தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக செல்போன்களில், பல்வேறுவிதமான ஆப்கள் இதற்கு உதவுபவையாக இருக்கின்றன. ஒருவரின் நடிப்பு திறன், பாடல் திறன் எனப் பலர் இதன் மூலம் திறமைகளை வெளிப்படுத்தி சமூக வலைதளங்களில் புகழ் அடைகின்றனர். அதன் மூலம் அவர்களுக்கு வாய்ப்புகள் எளிமையாகின்றன.

இந்த வகையில், விஸ்வரூபம் படத்தின் முதல் பாகத்தில் பிரபல பாடகர் சங்கர் மகாதேவனுடன் இணைந்து கமல் பாடியிருந்த, ‘உனைக் காணாது’ என்ற பாடலை தோட்டத்தில் அமர்ந்து கொண்டு சாதாரண நபர் ஒருவர் அதே குரலில் பாடியுள்ளார். இவர் பாடிய வீடியோவை மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர் கோபி சுந்தர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வைரலான இந்த வீடியோ ஷங்கர் மகாதேவன் கவனத்துக்கும் சென்றுள்ளது. அதனைத் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஷங்கர் மகாதேவன், அவரை பற்றிய தகவல்களைத் தனக்குத் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவரது பதிவில் “இதைக் கேட்கும்போது, இந்த நாட்டின் மீது பெருமையாக உள்ளது. கலாச்சாரத்தில் மிகவும் வலிமையாக இருப்பதுடன் இதுபோன்ற பல திறமைகளையும் கொண்டுள்ளது. யார் இவர்? இவரை நான் எப்படிக் கண்டுபிடிப்பது? இது குறித்து எனக்கு உதவி தேவை. இவருடன் இணைந்து பணிபுரிய விருப்பம்” என்று பதிவிட்டுள்ளார்.

இப்பதிவுக்கு பதிலளித்த ஒருவர் பாடலை பாடிய நபரின் தொடர்பு எண்ணையும் பதிவிட்டுள்ளார். நேற்று(ஜூன் 30) சோஷியல் மீடியா டே (சமூக வலைதள தினம்). அந்த தினத்தில் இந்த திறமைசாலி அடையாளம் காணப்பட்டிருப்பது மிகப் பொருத்தமாக இருக்கிறது. சங்கர் மகாதேவனுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தால் சமூக வலைதளத்தின் வெற்றி. இதே வீடியோவை இசையமைப்பாளர் ஜிப்ரானும் இன்று (ஜூலை 1) பகிர்ந்து "அவரது தொடர்பு கிடைக்குமா" என்றுக் கேட்டிருக்கிறார்.

இதே போல் டப்ஸ்மாஷ் என்ற ஆப் மூலம் தனது திறமைகளை வெளிப்படுத்தியவர் மிருணாளினி. தற்போது இவர் 'நகல்' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர்களைப் போன்று பலரும் தங்களது திறமைகளை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி சாதித்து வருகிறார்கள்
Powered by Blogger.