முதல்வருக்கு மக்கள் மீது அக்கறையில்லை!

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்களை பற்றி கவலையில்லை, ஆட்சியைத் தக்கவைப்பதிலேயே அவருக்கு அக்கறை என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.


திருச்சியில் எம்.எல்.ஏ. மகேஷ் பொய்யாமொழி இல்ல திருமணம் இன்று காலை கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கே.என்.நேரு, பொன்முடி, டி.கே.எஸ்.இளங்கோவன், டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது மணமக்களை வாழ்த்திப் பேசிய ஸ்டாலின், சட்டப் பேரவை உறுப்பினராக இருக்கக் கூடிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லத்தில் நடக்கக் கூடிய நிகழ்ச்சியை நம்முடைய வீட்டு நிகழ்ச்சி போல் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

மணமகன் கார்த்திகேயன் குறித்து டி.ஆர்.பாலு பேசும்போது, எங்களுடைய உயரத்தை வைத்து தளபதி பேசினார் என்று கூறினார். பாலு அதனை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. எப்போதும் அரைகுறையாகவே புரிந்துகொண்டு பேசுவார்.

நாங்கள் பேசியதை வெளிப்படையாகச் சொல்கிறேன், ‘ஆளும் வளரணும், அறிவும் வளரணும் என்று தான் கூறினேன். அது கார்த்திகேயனுக்கு அதிகமாகவே இருக்கிறது. அதனால் தான் கார்த்திகேயன் இளைஞரணியில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

அமைச்சர் பதவி இருந்தாலும், இல்லை என்று சொன்னாலும் இரண்டையும் ஒன்றாக கருதி கடைசி நிமிடம் வரை கலைஞருக்கு உறுதுணையாக இருந்து பணியாற்றியவர் அன்பிலார்.

அதுபோன்று அவருடைய மகன், பொய்யாமொழி எனக்காக எவ்வளவு தூரம் துணை நின்றார் என்பது எல்லோருக்கும் தெரியும். தற்போது உதயநிதி ஸ்டாலினும், கார்த்திகேயனும் நண்பர்களாக உள்ளனர். இவ்வாறு வாழையடி வாழையாக எங்கள் குடும்பமும், அன்பிலார் குடும்பமும் நெருக்கமாக இருந்து வருகிறது என்று குறிப்பிட்டார் ஸ்டாலின்.

அன்பிலார் இல்ல நிகழ்ச்சியில் அரசியல் பேசாமல் இருந்தால் எப்படி என்று தனது பேச்சைத் அரசியல் பக்கம் திருப்பிய ஸ்டாலின், “திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று எண்ணுவதைவிட, அதிமுக அரசு ஒழிய வேண்டும் என்று தான் தமிழக மக்கள் ஆவலோடு காத்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடைபெறுகிறது. பழனிசாமி தலைமையில் ஓர் ஆட்சியும், மத்திய அரசின் சார்பில் ஆளுநர் தலைமையில் ஓர் ஆட்சியும் நடைபெறுகிறது. இரண்டு ஆட்சியிலும் தமிழக மாநில சுயாட்சி உரிமை பறிபோய் கொண்டிருக்கிறது.

காவிரி பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக கருதி ஆளும் கட்சியினர் விழா கொண்டாடுகின்றனர். நன்றி தெரிவித்து கூட்டங்கள் நடத்துகிறார்கள். ஆனால், காவிரி பிரச்னையில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகக் கர்நாடக அரசு அறிவித்துள்ளது குறித்து தமிழக அரசு கவலைப்படவில்லை.

நீட் பிரச்சினை, விவசாயிகள், தூத்துக்குடி துயர சம்பவம், காவிரி விவகாரத்தை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தமது ஆட்சியைத் தக்கவைப்பதிலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்” என்று குற்றம்சாட்டினார்.

No comments

Powered by Blogger.