தமிழ் மக்களிடம் விடுதலைப் புலிகளின் ஆதரவு அதிகரிக்கிறதா?

ஈழத் தமிழர்களிடையே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு அதிகரித்துள்ளதா? என இலங்கை அரசு திடீர் ஆய்வு நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்துக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து ஈழத் தமிழர்கள் பேச இயலாத நிலை இருந்தது வந்தது. தமிழர்கள் கடைபிடித்து வந்த மாவீர்ர் நாள் நிகழ்வுகளும் வெளிப்படையாக நடத்த முடியாத நிலை இருந்து வந்தது.

ஆனால் தற்போது அப்படியான நிலைமை தமிழர்களிடம் இல்லை. மாவீரர் நாள், கரும்புலிகள் நாள் ஆகியவை பகிரங்கமாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பேச்சும் அதிகரித்துள்ளது.

அண்மையில் அமைச்சராக இருந்த விஜயகலா, தமிழீழ விடுதலைப் புலிகளின் தேவை குறித்து பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்து அவரது பதவியை பறித்தது. அதேபோல விடுதலைப் புலிகள் இயக்க தளபதிகள் திலீபன், கிட்டு ஆகியோரது சிலைகளை சீரமைக்கக் கோரி யாழ்ப்பாண மாநகரசபையில் உறுப்பினர்கள் தீர்மானமும் நிறைவேற்றினர்.

இப்படி தமிழர்களிடம் மீண்டும் அதிகரித்து வரும் விடுதலைப் புலிகள் ஆதரவு நிலை இலங்கை அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதையடுத்து தமிழர்களின் இந்த மனோநிலை குறித்து ஆராய இலங்கை அரசு உயர்நிலைக் குழு ஒன்றை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அண்மையில் அனுப்பி வைத்தது.

இக்குழுவில் சட்டம் ஒழுங்கு அமைச்சர், சட்டம் ஒழுங்கு இணை அமைச்சர் மற்றும் காவல்துறை தலைவர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். தமிழர்களிடையேயான புலிகள் ஆதரவு நிலையை தடுப்பது எப்படி என்பது குறித்து இந்த குழு ஆய்வு செய்திருக்கிறதாம். 
Powered by Blogger.