அவ்ளோ பெரிய மாஸ்டர் இல்ல: சமந்தா!

சமந்தா, சிவகார்த்திகேயன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் படம் சீமராஜா. இதில் சமந்தா சிலம்பம் மாஸ்டராக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு அவர் விளக்கமளித்துள்ளார்.
பொன்ராம் இயக்கத்தில் உருவாகிவரும் சீமராஜா படம் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இறுதிக் கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இசை வெளியீடு மதுரையில் மாபெரும் அளவில் ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. நேற்று முன்தினம் ‘வாரேன் வாரேன் சீமராஜா’ என்ற ஒரு பாடலை மட்டும் படக்குழு வெளியிட்டது. சிவகார்த்திகேயனுக்கான ஓப்பனிங் பாடலாக உருவாகியுள்ள இப்பாடல் வெளியாகி 24 மணிநேரத்தில் 10 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
சமந்தா தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை சமீபத்தில் முடித்தார். சிவகார்த்திகேயன் தனது டப்பிங் பணிகளை நேற்று (ஜூலை 26) நிறைவு செய்துள்ளார். டப்பிங் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி இதை உறுதிபடுத்தியுள்ளார்.
சிவகார்த்திகேயன் மன்னர் வீட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் சமந்தா சிலம்பம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகவும் நடித்துள்ளனர். சமந்தா தனது கதாபாத்திரத்திற்காக மூன்று மாதங்கள் சிலம்பம் கற்றுக்கொண்டதாகச் செய்திகள் வெளியாகின. இதை சமந்தா மறுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “15 நாள்கள் மட்டுமே நான் பயிற்சி பெற்றேன். அதிகமாக எதிர்பார்க்காதீர்கள்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.