யாழ் பெண் ஒருவர் படுகொலை விசாரனையில் நீதித்துறையின் மர்மம் என்ன?

யாழ். மானிப்பாய் - சங்கரபிள்ளை வீதியில் வயோதிபப் பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.


குறித்த வழக்கு விசாரணைகள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொலை சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ. ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி க. சுகாஸ் முன்னிலையாகி இருந்தார்.

இதில், “சந்தேகநபர் மனநிலை பாதிக்கப்பட்டவர். அவருக்கும் இந்தக் கொலைக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. சம்பவ தினத்தன்று கொலையாளி வீட்டுக்குள் நுழைவது, வீட்டிலிருந்து வெளியேறுவது என்பன கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.

ஆனால் கைது செய்யப்பட்ட நபருக்கும், கமராவில் பதிவாகிய நபருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவர் அவர் இல்லை. எனவே சந்தேகநபரை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்” என சட்டத்தரணி க. சுகாஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், சந்தேகநபருக்கு எதிராக பொலிஸாரால் உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத நிலையில் நீதிமன்று சந்தேகநபரை வழக்கிலிருந்து விடுவித்துள்ளது.

யாழ். மானிப்பாய் - சங்கரபிள்ளை வீதியில் கடந்த மாதம் 28ஆம் திகதி 60 வயதுடைய தம்பையா லீலாதேவி என்ற வயோதிப் பெண் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

பிச்சை கேட்பது போல் வந்து, வீட்டுக்குள் புகுந்து குறித்த மூதாட்டியை கொலை செய்துவிட்டு கொலையாளி தப்பிச்சென்றிருந்தார்.

சம்பவம் தொடர்பாக ஆனைக்கோட்டைப் பகுதியில் சந்தேகத்தின் பேரில் நடமாடிய 35 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.