பென்ஸுக்கும் பாலுக்கும் ஒரே வரியா? மோடி சரியா?
ஜிஎஸ்டி என்ற சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டு
ஓராண்டு நிறைவடைந்து அதற்கான கோலாகல விழா தலைநகர் டெல்லியில் ஜூலை 1, 2018 அன்று நடைபெற்றுள்ளது. அதில் நிதியமைச்சர்கள் பியூஷ் கோயல், அருண் ஜேட்லி ஆகியோர் உரையாற்றியுள்ளனர். தலைமை அமைச்சர் மோடி அவர்கள் சார்புள்ள சுயராஜ்யா என்ற பத்திரிகைக்கு நேர்முகம் அளித்துள்ளார்.
ஓராண்டு நிறைவடைந்து அதற்கான கோலாகல விழா தலைநகர் டெல்லியில் ஜூலை 1, 2018 அன்று நடைபெற்றுள்ளது. அதில் நிதியமைச்சர்கள் பியூஷ் கோயல், அருண் ஜேட்லி ஆகியோர் உரையாற்றியுள்ளனர். தலைமை அமைச்சர் மோடி அவர்கள் சார்புள்ள சுயராஜ்யா என்ற பத்திரிகைக்கு நேர்முகம் அளித்துள்ளார்.
இவர்கள் மூவர் மட்டுமல்லாது, பாஜக ஆதரவாளர்கள் அனைவரும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை நியாயப்படுத்துகிறார்கள். ‘யாரும் ஏமாற்ற முடியாது. வரி வருவாய் உயரும். வரிகள் சில மட்டங்களாகச் சுருங்குவதால் நாட்டில் விலை வாசி குறையும். ஊழல் ஒழியும். தடையற்ற வர்த்தகம் ஏற்படும். பொருள் போக்குவரத்து சுலபமாகும். நாடு ஒரே சந்தையாகும். வரி செலுத்தும் முறை எளிமையாகிவிடும்.’ இவை அனைத்தும் ஜிஎஸ்டிக்கு ஆதரவாக முன்வைக்கப்பட்ட வாதங்கள். ஜிஎஸ்டி செயல்படுத்தப்பட்டபோது ஒரே வரி என்றில்லாமல் 4, 5 மட்டங்களில் வரி விதிக்கப்பட்டன. பல பொருட்கள் 0 - 5% வரி விதிப்புக்குள்ளாயின. சில பொருட்கள் 12%, சில 18%, சில 28% எனப் பல்வேறு மட்டங்களில் வரி விதிக்கப்பட்டன. பெட்ரோலியப் பொருட்களும், மதுவும் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்படவில்லை.
ஜிஎஸ்டியின் முதற்கட்ட மற்றும் சிக்கலான பணியைத் துவக்கியது காங்கிரஸ் கட்சி. ஜிஎஸ்டி சென்ற ஆண்டு செயல்படுத்தப்பட்டபோது எதிர்க்கட்சியான காங்கிரஸ் வைத்த குற்றச்சாட்டு, வரி மட்டங்கள் சிலவாக இல்லாது பலவாக உள்ளன. அதனால் சிக்கலும் குழப்பமும் நிலவுகின்றன என்பதுதான். அப்போதே பாஜகவின் பதில், ‘இந்தியா ஏற்றத்தாழ்வு மிக்க நாடு. ஆகவே, ஒரே மட்டத்தில் வரி விதிக்க முடியாது. பல மட்டங்களில்தான் வரி விதிக்க முடியும். ஹவாய் செருப்பு அணிந்திருப்பவனும் பென்ஸ் காரில் பயணிப்பவனும் ஒன்று கிடையாது. ஆகவேதான் அவற்றை வேறுபடுத்தி அப்பொருட்களுக்கு வெவ்வேறு விகிதத்தில் வரி வசூல் செய்கிறோம்’ என்பதாகும். (ஆனால், ஜிஎஸ்டி வரி செயல்படுத்தப்பட்டபோது சொகுசு கார்களுக்குக் குறைவான மட்டத்திலேயே வரி விதிக்கப்பட்டு அந்தக் குறையைப் பலரும் சுட்டிக்காட்டிய பின்னர்தான் வரிகள் உயர்த்தப்பட்டன என்பது வரலாறு.) இவ்வாறு வேறுபடுத்திப் பார்ப்பதென்பது நமது நாட்டில் மிகவும் அவசியம். ஏழைக்கும் (ஹவாய் செருப்பு அணிபவன்) பணக்காரனுக்கும் (பென்ஸ் கார் வாங்குபவன்) ஒரே வரி விதிக்கவில்லை. ஏழைகளுக்கான அரசு இது. ஆகவே அவன் பயன்படுத்தும் பொருளுக்குக் குறைவான வரியையும், பணக்காரனுக்கு ஆகக் கூடுதலான வரியையும் விதிக்கிறோம். ஆனால், இந்தக் காங்கிரஸ் கட்சி எல்லாவற்றிற்கும் ஒரே வரி விதிக்கச் சொல்கிறது. குறைந்த வரியைச் செலுத்தும் ஏழைகளையும், 18% வரி செலுத்த வைக்கவே அக்கட்சி முயற்சிக்கிறதென பாஜக தலைவர்கள் குற்றம்சுமத்துகின்றனர். அவர்கள் லாவணி அரசியல் ஒருபுறம் இருக்கட்டும். நமது கேள்வி இதுதான். ஜிஎஸ்டி வரியில் இதுபோல் ஏழை / பணக்காரன் என வேறுபடுத்திப் பார்க்க முடியுமா? முடியாது என்றால் இந்த எடுத்துக்காட்டு என்ன சொல்கிறது? (பாலுக்கும் பென்ஸ் காருக்கும் ஒரே வரியா?)

ஜிஎஸ்டி என்பது ஒரு நுகர்வு வரி. ஒரு பயனாளி ஒரு பொருளையோ, சேவையையோ நுகரலாம். அப்படி நுகரும்போது அவர் அதற்குண்டான வரியைச் செலுத்த வேண்டும். பொருள் மீதும் சேவை மீதும்தான் வரி. அவர் மீது அல்ல. அதாவது அவர் நுகரவில்லை என்றால் அவர் அந்த வரியைச் செலுத்தத் தேவையில்லை. ஆனால், நுகரத் தலைப்பட்டால் நுகர்பவரின் வரி செலுத்தும் திறன் கணக்கில் கொள்ளப்படுவதேயில்லை. நீ யாராக இருந்தாலும் பொருளையோ, சேவையையோ நுகர்ந்தால் வரி செலுத்த வேண்டும். இதற்குப் பெயர்தான் மறைமுக வரி. இத்தகைய வரிகள் எளியவர் மீது அதிக வரிச் சுமையையும் வலியவர் மீது குறைவான சுமையையும் சுமத்தும். எப்படி?
அன்றாட எடுத்துக்காட்டு ஒன்றைக் கொள்வோம். வீட்டிலுள்ளவர்களுக்கு உணவுக்காக மளிகைப் பொருட்கள் வாங்குகிறோம். குழந்தை இருந்தால் அதற்கு ஒரு பிஸ்கட் பொட்டலம் வாங்குவோம். அப்பொட்டல விலையுடன் 18% ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். தினக் கூலிகளும் தொழிலாளர்களும் பிஸ்கட் பொட்டலங்களை வாங்கிச் செல்கிறார்கள். அவர்களது ஒருநாள் கூலி (ஆண்) ரூ.600 மற்றும் (பெண்) ரூ.300. ஓர் ஆண் வாங்கும்போது அவன் மீதான வரிச் சுமை குறைவு. (5 ரூபாய்க்கு 90 பைசா) அவன் வாங்கும் கூலி நாளொன்றுக்கு ரூ.600. பெண் ரூ.300 மட்டுமே கூலியாகப் பெற்றாலும் அவளும் அந்தப் பொட்டலத்துக்கு 90 பைசாவை வரியாகச் செலுத்துகிறாள். இது அவர்களுக்குள் இருக்கும் வேறுபாடு. கடைக்காரரோ வரி செலுத்துபவர் ஆண், பெண் என அவர்களது கூலியை வைத்து வரி வசூல் செய்வதில்லை. இதே பிஸ்கட் பொட்டலத்தை ஒரு கல்லூரி பேராசிரியர் (மாத சம்பளம் ரூ.1,50,000) வாங்கும்போது அவர் செலுத்த வேண்டிய வரியும் 90 பைசாதான். இவரது வரி தாங்கும் திறனும் ஒரு சித்தாளின் வரி தாங்கும் திறனும் ஒன்றா? இல்லையே. பின் ஏன் ஒரே விகிதத்தில் வரி விதிக்கப்படுகிறது? அப்படித்தான் இந்த வரியை வசூலிக்க முடியும். அதற்கு ஆண், பெண், ஏழை, பணக்காரன் என்றெல்லாம் பாகுபடுத்திப் பார்க்கத் தெரியாது. முடியாது. அதனால்தான் இதனை மிகவும் பிற்போக்கான வரி எனக் கருதுகின்றனர். இந்த வரிக்கு எந்தச் சமூக நீதியும் கிடையாது. இத்தகைய வரி ஏழையையும் எளியவர்களையும் வரிச் சுமையை அதிகம் சுமக்க வைக்கும்.
அப்படியென்றால் ஏழை, பணக்காரன் என வேறுபடுத்தி வரி வசூலிக்க முடியுமா? முடியும். அது வேறு விதமான வரி விதிப்பு. நேரடி வரி விதிப்பு. வருமான வரி, சொத்து வரி, லாப வரி போன்ற வரிகள் இவ்வகையைச் சார்ந்தவை. வருமானம் குறைவாக உள்ளோர் குறைவாகவும், கூடுதலாக உள்ளோர் கூடுதலாகவும் வரி செலுத்தும் வண்ணம் அதனைச் சுலபமாக வடிவமைக்கலாம். இதன் வாயிலாக ஒருவரின் வரி செலுத்தும் திறனுக்கு ஏற்ப வரியைச் சுமத்தலாம். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு வலிமையானவர்களுக்குக் கூடுதல் வரியும் (தற்போது வருமானத்தில் 30 விழுக்காடு) எளியவர்களுக்கு வரி விலக்கும் வருமான வரியில் வசூலிக்கப்படுகிறது. அதாவது பென்ஸ் கார் வைத்திருப்போர் (நிறைய சம்பாதிப்பதால்) கூடுதல் வரி செலுத்துவார்கள். பால், டீ அருந்துவோர், ஹவாய் செருப்பு அணிவோர் (எளியவர்கள்) வரி செலுத்தத் தேவையில்லை. இந்த எடுத்துக்காட்டு நேரடி வரிக்குத்தான் பொருந்தும். இப்படி வரி செலுத்தும் திறனைக் கணக்கில் கொண்டு இந்த வரி விதிக்கப்படுவதால் இது முற்போக்கு வரி எனக் கருதப்படுகிறது. இதற்கான எடுத்துக்காட்டை மறைமுக வரியான ஜிஎஸ்டிக்கு எடுத்தாள்வது ஒரு கண்கட்டு வித்தையல்லவா?
கேட்பவர்கள் அனைவரும் இது நியாயம்தானே என எண்ணுவர். அது இயல்பு. ஏனெனில் பென்ஸ் காருக்குக் கூடுதல் வரி, பாலுக்கு வரியில்லை. ஆனால், இந்த எடுத்துக்காட்டில் பொருட்களைச் சுட்டுவதன் மூலம் அதன் வாயிலாக ஏழை, பணக்காரன் வேறுபாட்டை முன்னிறுத்தித் தாங்கள் நியாயமாக நடப்பது போன்று ஏமாற்றுவதில் இவர்கள் வெற்றி பெறுகிறார்கள். எப்படி என்று பார்ப்போம்.
ஒருவர் பென்ஸ் காரில் சென்று பெட்ரோல் வாங்குகிறார். மற்றொருவர் ஒரு மிட்டாய் வியாபாரி. அவர் டிவிஎஸ் 50யில் பெட்ரோல் வாங்குகிறார். இருவரும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.40 வரை வரி செலுத்துகின்றனர். இதில் ஏழை, பணக்காரன் என்பதெல்லாம் கிடையாது. ஆனால் அவர்கள் கொடுத்த எடுத்துக்காட்டில் பாலுக்கு வரி இல்லையே என்றால், ஏழை மட்டுமா பாலை வாங்குகிறான்? பணக்காரனும்தானே வாங்குகிறான். ஏழை பால் மட்டும்தான் வாங்குகிறானா? வேறு பொருட்களை வாங்குவதே இல்லையா? அவன் எந்தெந்தப் பொருட்களை வாங்குகிறான் என்று கண்டறிந்து வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா? இல்லையே. அளிக்கப்பட்டுள்ள விலக்குகள் ஒரு சமாதானத்துக்குத்தான்.

பணக்காரர்களுக்குக் கூடுதலாகவும், ஏழைகளுக்குக் குறைவாகவும் வரி விதித்திருப்பது போல் பரப்புரை செய்வதென்பது ஓர் அரை உண்மையாகும். அரை உண்மைகளில் (Half truths) இவர்கள் வல்லவர்கள். அது மட்டுமல்ல; ஏழைப் பங்காளர்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த இதுவும் ஒரு முயற்சி. எப்படிச் செல்லாத நோட்டு அறிவிப்பு பெரும் பணக்காரர்களின் பண இருப்புகளைச் செல்லாததாக்கி விடும் என்று பாமரர்களை நம்ப வைத்தார்களோ அதே போன்றதொரு முயற்சிதான் பென்ஸ் கார் - பால் எடுத்துக்காட்டாகும். எளியவர்கள் எல்லாம் பென்ஸ் கார்காரன் கூடுதல் வரி கட்டுகிறான்; நாம் குறைவாகத்தானே கட்டுகிறோம் என எண்ணலாம். ஆனால், அவன் மீதுதான் கூடுதலான நிதிச் சுமை என்பதை மோடி அறிய மாட்டாரா? புரியாதவரா? இல்லை. இதுதான் அவர்களது கறுப்பு, வெள்ளை அரசியல். இதில் எளிய எடுத்துக்காட்டுகள் மூலம் பாதி உண்மைகள் வாயிலாகப் பிம்பங்களை நிறுவ முடியும். அதன் ஒரு பகுதிதான் இதுவும்.
கட்டுரையாளர் குறிப்பு:

ஜெ.ஜெயரஞ்சன், பொருளாதார ஆய்வாளர். சென்னை எம்.ஐ.டி,எஸ். நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னை மாற்று வளர்ச்சி மையத்தை (ஐடிஏ) உருவாக்கி, தொடக்கம் முதல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இவரது ஆய்வுக் கட்டுரைகள் முக்கிய ஆய்விதழ்களிலும் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன.

.jpeg
)





கருத்துகள் இல்லை