அமைச்சர்கள் ஆரம்பிக்கும் புது சேனல்!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. உடனே போஸ்ட் ஒன்றை ஃபேஸ்புக் பதிவிட்டது.

“அதிமுகவின் சேனலாக இருந்த ஜெயா டிவி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தினகரன் சேனலாக மாறிப்போனது. அதே போல அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரும் தினகரன் ஆதரவுப் பத்திரிகையானது. எடப்பாடியும் பன்னீரும் கைகோர்த்த பிறகு ‘நமது அம்மா’ என்ற பெயரில் பத்திரிகை தொடங்கிவிட்டார்கள்.

அடுத்து சேனல் ஆரம்பிக்கலாம் என்ற பேச்சு வந்தபோது பல ஐடியாக்கள் சொல்லப்பட்டன. சிலர், இருக்கும் சேனலில் ஒன்றை வாங்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இன்னும் சிலரோ, புதிதாக நமக்கான அடையாளத்துடன் தொடங்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்கள்.

கட்சியின் சொத்தாக டிவி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை. ஜெயா டிவி, கலைஞர் டிவி, மெகா டிவி, மக்கள் டிவி, வெளிச்சம் டிவி எல்லாமே கட்சி சார்ந்து இருந்தாலும் கட்சியின் சொத்தாக இல்லை; வேறு ஒருவர் உரிமையாளராக இருப்பார். ஆனால், அது கட்சியின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சேனலாக இருக்கும். இனி, தொடங்கப் போகும் சேனலும் அப்படித்தான் இருக்க வேண்டும். அதை யார் தொடங்கப் போகிறார்கள் எனக் கேட்க வேண்டும் என்றும் சிலர் ஐடியா கொடுத்திருக்கிறார்கள்.

இந்த ஆலோசனையில், அமைச்சர்கள் தங்கமணியும், சி.வி.சண்முகமும் ’நாங்களே சேனலைத் தொடங்குகிறோம்’ என்று முன்வந்திருக்கிறார்கள். அதிமுக தலைமையும் அதற்கு அனுமதி கொடுக்க, கிடு கிடுவென வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்கள். சி.வி.சண்முகத்தின் தம்பி ராதாகிருஷ்ணன்தான் சேனல் உரிமையாளர். அமைச்சர் தங்கமணியின் மருமகன்தான் தலைமை அதிகாரி. சேனலுக்கு ’நியூஸ் ஜெ’ எனப் பெயர் சூட்டி ஆள் எடுக்கும் படலம் தொடங்கியது. ஒருகாலத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் இருந்த சக்சேனாதான் இந்த டிவிக்கு தலைமை அட்வைஸர்.

அடையாறு மலர் ஹாஸ்பிட்டலுக்கு அருகேதான் சேனலுக்காக ஒரு இடம் வாடகைக்கு எடுக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூஜையும் போடப்பட்டது. பூஜைக்கு முதல்வரையும், துணை முதல்வரையும் அழைத்திருக்கிறார்கள். ‘பூஜைக்கே நாங்க வந்தால் நல்லா இருக்காது. ஒரு சேனலை எப்படி ஆரம்பிக்கணுமோ அப்படி ஆரம்பிங்க. அதுவரைக்கும் அரசியல் சாயம் பூச வேண்டாம். நாங்க யாரும் அந்தப் பக்கம் வரவே மாட்டோம். சேனல் தொடங்கிய பிறகு என்ன செய்யலாம்னு திட்டமிட்டுக்கலாம். மத்தபடி என்ன உதவிகள் வேணுமோ கேளுங்க.. அதை செஞ்சு கொடுக்கிறோம்..’ என்று சொல்லிவிட்டாராம் எடப்பாடி.

பூஜை போட்ட நாளில் சேனல் உரிமையாளரான ராதாகிருஷ்ணன், ‘இப்போதைக்கு நாம இங்கே இருப்போம். விரைவில் நுங்கம்பாக்கத்தில் தயாராகிக்கொண்டிருக்கும் நமது சொந்தக் கட்டடத்துக்குப் போய்விடலாம். நாங்க சொல்லும் வரை நீங்க யாரும் எங்கேயும் ‘நியூஸ் ஜெ’ என்ற பெயரைப் பயன்படுத்தவே வேண்டாம்’ என்று சொல்லியிருக்கிறார். பூஜை முடிந்ததும், முதல்வரைச் சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியிருக்கிறார் ராதாகிருஷ்ணன்.

உடனடியாக அரசு கேபிளில், நியூஸ் ஜெவுக்கான இடம் ஒதுக்கப்பட்டு சோதனை ஓட்டம் தொடங்கிவிட்டது. விரைவில் .... ‘செய்திகள்... செய்திகளாக!’ என்ற வாசகத்துடன் சிகப்பு வெள்ளை பச்சை நிறத்தில் மிளிர்கிறது நியூஸ் ஜெ. சேனல் துவக்க விழாவில் முதல்வரும் துணை முதல்வரும் வந்து நிற்பார்கள். அதுவரை இருவரும் அமைதியாகவே இருப்பார்கள் என்று சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.

அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த வாட்ஸ் அப், தொடர்ந்து மெசேஜ் ஒன்றையும் தட்டியது.

“திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திடீரென 17 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அறிவாலயத்தின் நுழைவு வாயில் தொடங்கி ஒவ்வொரு அறையிலும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அறிவாலயம் ஏன் திடீரென கண்காணிப்பு வளையத்துக்குள் வந்தது என விசாரித்தால், நிறைய சொல்கிறார்கள். ‘அண்மையில் அறிவாலயத்தில் தளபதி என்ன பேசினாலும், அது உடனுக்குடன் எல்லோருக்கும் போகுது. ஒருபக்கம் மீடியாவுக்கும் சொல்லிடுறாங்க. இன்னொரு பக்கம், அதிமுகவில் இருக்கும் சிலருக்கும்கூடத் தகவல் போயிட்டு இருக்கு. இதை எல்லாம் உள்ளே இருக்கும் சிலர்தான் செஞ்சிட்டு இருக்காங்க. அதனால்தான் அண்மையில் நடந்த முக்கியக் கூட்டம் எதையும் தளபதி அறிவாலயத்தில் நடத்தவே இல்லை. முரசொலி அலுவலகம் அல்லது அவரோட வீட்டில்தான் நடத்துறாரு. முன்பெல்லாம் காரில் போகும்போது தளபதி போனில் பேசிட்டேதான் போவாரு. இப்போது காரில் பேசுவதையும் முழுமையாகத் தவிர்த்துட்டாரு. எங்கிருந்து தகவல் போகுது என்பதைக் கண்டுபிடிக்கத்தான் இவ்வளவு ஸ்ட்ரிக்ட் பண்ணியிருக்காரு.

அறிவாலயத்தின் எல்லா கேமரா லிங்க்கும் தளபதி போனில் இணைக்கப்பட்டுள்ளது. அவர் இருக்கிற இடத்தில் இருந்தே அறிவாலயத்தைக் கவனிக்கிறாரு. திடீர்னு தளபதிகிட்ட இருந்து போன் வருது. ‘இப்போ ஒருத்தர் உள்ளே வந்துட்டு போறாரே.. அவரு யாரு? எதுக்காக வந்துட்டு போறாரு? யாரைப் பார்த்தாரு?’ என்பது வரை விசாரிக்கிறாரு. போன் ஆபரேட்டர் போனில் பேசுவதைக்கூட கவனிச்சிட்டு கேட்கிறாரு. தளபதி பார்த்துட்டு இருக்காரு என்று தெரிஞ்சதுமே அறிவாலயமே தலைகீழாக மாறிடுச்சு. எல்லோரும் பயங்கர சின்சியரா இருக்காங்க...’ என்று சொல்கிறார்கள். ஆக, கண்காணிக்கிறார் ஸ்டாலின்!” என்று முடிந்தது மெசேஜ். அதை காப்பி செய்து ஷேர் செய்துவிட்டு லாக் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

No comments

Powered by Blogger.