ராகுல் எதிர்ப்பு!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால் அது பயனற்றதாகிவிடும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூலை 19) கூறியுள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருப்பதும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் துறைகள், மக்களுக்குத் தேவையான தகவல்களைத் தரக் கடமைப்பட்டுள்ளதை உறுதிசெய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தில் தகவல் ஆணையர்களின் ஊதியம், பணிக்காலம் தொடர்பான விதிமுறைகள் குறித்து இடம்பெறவில்லை. எனவே சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2018 என திருத்த முயற்சித்து அதற்கான வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் எந்த திருத்தத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்” என்று பல்வேறு கட்சியினரும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஆர்டிஐ சட்ட திருத்தத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் எதிர்ப்புத் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், அதில், “ ஒவ்வொரு இந்தியரும் உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். ஆனால் பாஜக உண்மைகளை மறைக்க வேண்டும் என நினைக்கிறது. அதிகாரத்தில் உள்ளவர்களைக் கேள்வி கேட்கக் கூடாது என்பதையும், உண்மைகளை மக்களிடம் இருந்து மறைக்க வேண்டும் என்பதையுமே பாஜக நம்புகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுவது, அச்சட்டத்தை பயனற்றதாக்கும்” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.