வரி ஏய்ப்பு இருப்பதால் வருமான வரி சோதனை!

வரி ஏய்ப்பு இருப்பதால் தான் வருமான வரி சோதனை நடைபெறுவதாகத் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், எஸ்.பி.கே குழும உரிமையாளரும், நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருமான செய்யாதுரை, அவரது மகன் நாகராஜன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில் 180 கோடி ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 105 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதிமுக ஆட்சியில் ஒப்பந்ததாரர் வரி ஏய்ப்பு செய்து சொத்துகுவித்ததாக பல்வேறு கட்சியினரும் கூறி வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை ஊழலுக்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வருமான வரி சோதனை தொடர்பாக இன்று (ஜூலை 19) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “வரி ஏய்ப்பு இருப்பதால் தான் வருமான வரி சோதனை நடைபெறுகிறது” என்று கூறியுள்ளார்.
“அதிமுக ஆட்சி மட்டுமல்லாமல் எல்லா கட்சியின் ஆட்சியிலும் ஒப்பந்ததாரர்கள் வேலை எடுத்துச் செய்வது வாடிக்கையாக உள்ளது. குறிப்பிட்ட கட்சியிடம் மட்டும் யாரும் வேலை எடுத்துச் செய்வதில்லை. எனவே குறிப்பிட்ட கட்சி மீது பழிசுமத்துவது தவறானது” என்று கூறியுள்ளார்.
தினகரன் அணியைச் சேர்ந்த தங்க தமிழ்செல்வன் ஏற்கனவே இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டை நாங்கள் முன்வைத்திருந்தோம் ஆனால் அதனை அப்போது யாரும் கண்டு கொள்ளவில்லை. தற்போது வருமான வரித் துறையினர் ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளனர் என கூறியுள்ளார் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அவர்கள் முதுகுக்குப் பின்னால் இருக்கக் கூடிய அழுக்கை முதலில் பார்க்க சொல்லுங்கள், அடுத்தவர்களை அப்புறம் பார்க்கலாம் என்று கூறிய துணை முதல்வர் அவரது வாயில் இருந்து உண்மையே வராது என்று தெரிவித்துள்ளார்.
தலைமை கழக நிர்வாகிகளுடன் கூடி பேசி நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி அறிவிப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.