நடிகை பிரியா வாரியரை பின்னுக்கு தள்ளிய ராகுல்!

மலையாளத்தில் புதுமுகங்களான பிரியா
வாரியர், ரோஷன் அப்துல் ரகூப் நடிப்பில் ‘ஒரு அடார் லவ்’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதம் 14-ந் தேதி உலகமெங்கும் திரைக்கு வர உள்ள இந்தப் படத்தில் ‘மாணிக்ய மலராய பூவி’ என்ற பாடல் இடம் பெற்று உள்ளது.

இந்தப் பாடல் காட்சியில் நாயகி பிரியா வாரியர், கதாநாயகனைப் பார்த்து கண் சிமிட்டி செய்கிற காதல் லீலை, இளைய தலைமுறையினர் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டது. அந்தப் பாடல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, வைரலாகி ஒரே நாளில் ‘யார் இவர்?’ என பிரியா வாரியரை கேட்க வைத்தது.
இந்தநிலையில் தான் நேற்றுமுன்தினம் நாடாளுமன்ற மக்களவையில் மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசின் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மான விவாதத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார். மத்திய அரசின் மீது குற்றச்சாட்டு ஏவுகணைகளை ஏவினார்.

அந்த ஆவேச பேச்சைத் தொடர்ந்து நேராக அவர் பிரதமர் மோடியின் இருக்கைக்கு சென்று, அவரை தழுவினார். எத்தனையோ உலக தலைவர்களை தழுவிய அனுபவமிக்க மோடிக்கு, ராகுலின் தழுவல் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஒரு சேர அளிக்க என்ன செய்வதென்றே அறியாமல் திகைத்துப்போனார். இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு அவரை அருகே வரச்செய்து முதுகில் தட்டிக்கொடுத்து புன்னகைத்தார்.

அதைத் தொடர்ந்து தன் இருக்கைக்கு திரும்பிய ராகுல் சபையை நோக்கி, “பிரதமருக்கு எதிராக என்னிடம் நிறைய வெறுப்புணர்வு இருக்கிறது என நீங்கள் எல்லாம் நினைப்பீர்கள். அப்படி எதுவும் கிடையாது. உள்ளபடியே சொல்வதானால், இந்தியன் என்பதற்கு அர்த்தத்தை, இந்து என்பதற்கான அர்த்தத்தை, சிவபக்தன் என்பதற்கான அர்த்தத்தை மோடியும், பாரதீய ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்தான் எனக்கு கற்றுத்தந்தன. இதற்காக உங்களுக்கு நன்றி சொல்கிறேன்” என்று சொல்லி விட்டு அவர் கண் சிமிட்டினார்.

அந்த கண் சிமிட்டல், அப்படியே அச்சு அசலாக பிரியா வாரியரின் சிமிட்டலைப்போல அமைந்தது. இது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாராட்டுக்களையும், விமர்சனங்களையும், மீம்ஸ்களையும் அள்ளியது.

இதில் பிரியா வாரியரை ராகுல் காந்தி பின்னுக்கு தள்ளினார்.

“வெளியே வாருங்கள் பிரியா வாரியர்... உங்களுக்கு ராகுல் காந்தி பலத்த போட்டியாக வந்து விட்டார்” என்று சமூக வலைத்தளங்களில் கூறுகிற அளவுக்கு நிலைமை போனது. இது பிரியா வாரியரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.

இது குறித்து அவர் கூறும்போது, “கல்லூரியில் இருந்து நான் திரும்பி வந்தபோது, நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கண் சிமிட்டினார் என்ற செய்தியை அறிந்தேன். அது மிகவும் இனிமையானது. அது ஒரு அடார் லவ் படத்தில் நான் செய்த செல்ல சேட்டை... இதே போன்று ராகுல் செய்தார் என்பது என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறது” என்று குறிப்பிட்டு உள்ளார். 

No comments

Powered by Blogger.