தூத்துக்குடிக்கு புதிய விமான சேவை!

பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி புதிய விமான சேவையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடங்கியுள்ளது.


தூத்துக்குடி விமான நிலையம் கடந்த 1992ஆம் ஆண்டு முதல் விமான சேவை நடத்தி வருகிறது. தற்போது சென்னை - தூத்துக்குடி இடையே ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தினமும் காலை, மாலை என 2 விமானங்களை இயக்கிவருகிறது. மேலும், ஜூலை 28ஆம் தேதி முதல் இன்டிகோ நிறுவனம், தூத்துக்குடி-சென்னை இடையே தினமும் 3 விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது.

இந்நிலையில்,பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு (செவ்வாய் தவிர்த்து பிற நாட்களில்) நேரடி விமான சேவையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இன்று (ஜூலை 1) முதல் துவங்கியுள்ளது .

இன்று பிற்பகல் 3.20 மணிக்கு 48 பயணிகளுடன் பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு மாலை 4.26 மணிக்கு வந்தடைந்தது. முதன்முதலாக வருவதையொட்டி தண்ணீர் பீச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், மாலை 4.56 மணிக்கு 72 பயணிகளுடன் தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு திரும்பியது.

இதன் துவக்கவிழா நிகழ்ச்சியில் பேசிய விமான நிலைய இயக்குநர் சுப்ரமணியன், ‘‘தூத்துக்குடி விமான நிலையம் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. தூத்துக்குடி விமான நிலையத்துக்கு ஏர்பஸ் உள்ளிட்ட பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கான நிலம் மாவட்ட நிர்வாகம் மூலம் கையகப்படுத்தப்பட்டு, விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விரைவில் விரிவாக்க பணிகள் நடைபெறவுள்ளது. அதே நேரத்தில் விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் முனையமும் இங்கு அமைக்கப்படவுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Powered by Blogger.