எடப்பாடி நடத்தி வைத்த திருமண பஞ்சாயத்து!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று (ஜூலை 1) 90 ஜோடிகளுக்குத் திருமணம் நடைபெற்றது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70ஆவது பிறந்தநாள் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
ஜெயலலிதாவின் 70ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் 90 ஜோடிகளுக்கு இன்று (ஜூலை 1) திருமணம் செய்து வைக்கப்பட்டது. அதிமுக தலைமை இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.
70ஆவது பிறந்த நாள் விழா என்றால் 70 ஜோடிகளுக்குத்தானே திருமணம் செய்துவைப்பார்கள், இது என்ன புது கணக்கு. 90 ஜோடிகளுக்குத் திருமணம் என்று அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.
கே.பி. முனுசாமியின் ஜோதிடர் சொன்ன ஆலோசனைகள் காரணமாகத்தான் இந்த ஏற்பாடாம். முனுசாமி ராசிபடி எண் 9 வருவதுபோல் திருமண ஜோடிகளைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். கன்னிப் பெண் கல்யாண ஆசையை நிறைவேற்றினால் உங்கள் ஆயுசுக்கு நல்லது, நினைக்கும் காரியம் நிறைவேறும். பொன், பொருள்கள் வந்துசேரும் என்று ஜோசியர் கூறியுள்ளார்.
அதனால்தான் 90 ஜோடிகளைத் தேர்வு செய்து அனைவருக்கும் தாலி, மணமக்களுக்கு வேட்டி சேலை , கட்டில் மெத்தை, பீரோ, பண்ட பாத்திரங்களும் ஏற்பாடு செய்துவைத்துவிட்டார்.
திருமண அழைப்பிதழை முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் கொடுத்து தலைமை ஏற்று மணமக்களை வாழ்த்த வரவேண்டும் என்று அழைத்துள்ளார் கே.பி.முனுசாமி. ‘உங்களுக்குப் பெரிய மனசு’ என்று அவரைப் பாராட்டியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இதற்கிடையே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12 ஒன்றிய செயலாளர்களில் பத்து ஒன்றிய செயலாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடந்த ஜூன் 29ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, “அம்மா பெயரில் அவரது சுயநலனுக்காக 90 ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறார், விழாவில் வைக்கப்படும் விளம்பரங்களில் ஜெயலலிதா படம் அருகில் ஒ.பி.எஸ் படமும், வலது பக்கத்தில் எம்.ஜி.ஆர். படத்துடன் உங்கள் படமும் வைத்துள்ளார். ஒ.பி.எஸ்.க்கு முன்னுரிமை கொடுத்துள்ளார் கே.பி.முனுசாமி. மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பெயரை அழைப்பிதழில் போடவில்லை. குறிப்பாக மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை பெயரைத் திட்டமிட்டு தவிர்த்துள்ளார். சாதி அரசியல் செய்கிறார். அவர் ஏற்பாடு செய்துள்ள திருமணவிழாவுக்கு நீங்கள் வரக்கூடாது” என்று கோரிக்கை வைத்துள்ளார்கள்.
இவை அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக்கொண்ட எடப்பாடி, “சுபகாரியம் நடத்துகிறார். அவரை பார்க்காதீர்கள், கட்சியைப் பாருங்கள் .நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருங்கள் நான் திருமணத்துக்கு வருகிறேன்” என்று சமாதானம் செய்து அனுப்பியுள்ளார்.
அதன்படியே, இன்று (ஜூலை 1) திருமணத்தைத் தலைமை தாங்கியும் நடத்தி கொடுத்துள்ளார்.
திருமணத்தை நடத்தி வைத்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஒரு மனிதனுக்கு இனிமையான நாள் திருமண நாள். அவர்களின் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது மகனுக்கு ஜெயலலிதா தான் திருமணம் நடத்திவைத்தார். 1996ல் கட்சியை உடைக்கத் துரோகிகள் திட்டமிட்டிருந்தனர். இதனைக் குறிப்பிட்டு பேசிய ஜெயலலிதா, ‘கட்சியை உடைக்கப் பலரும் முயன்றபோது, கட்சி தலைமைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வீடுவீடாக சென்று கூறியவர் அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமி’ என்று குறிப்பிட்டார்” என பழையவற்றை நினைவுகூர்ந்தார்.
தற்போது ஜெயலலிதாவின் நிலையில் தான் உள்ளதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, “ கட்சியின் நெருக்கடியாக காலக்கட்டத்தில் சூழ்ச்சிக்காரர்களின் சூழ்ச்சியில் சிக்காமல் இத்தனை அமைச்சர்களும் நிர்வாகிகள் இங்கு கலந்துகொண்டுள்ளனர்” என்று பெருமிதமாக குறிப்பிட்டார்.
“இந்தியாவில் அதிகம் போராட்டம் நடைபெறும் மாநிலம் தமிழகம்தான். கடந்த ஓராண்டில் 31,000 போராட்டங்களை அரசு எதிர்கொண்டுள்ளது. அத்தனையையும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களின் துணையோடு நீர்த்துப்போக செய்துள்ளோம்.
எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அதனை முறியடிக்கும் வல்லமை படைத்த அரசு இது.
மாநிலம் வளர்ச்சியடைய வேண்டுமென்றால் திட்டங்கள் வேண்டும். ஆனால், வளர்ச்சி திட்டங்களை எதிர்க்கட்சிகள் முடக்க முயற்சிக்கின்றன” என்று குற்றம் சாட்டிய அவர் “பசுமைவழிச் சாலை என்பது சேலத்துக்கு மட்டுமானது என்ற தோற்றத்தை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துகின்றன. இவர்களால் அதிமுக என்ற கட்சியையும் வீழ்த்த முடியாது ஆட்சியையும் வீழ்த்த முடியாது” என்றும் அவர் கூறினார்.
மேலும், “40 சதவிகிதம் கமிசனுக்காகத்தான் ரூ.10 ஆயிரம் கோடியை செலவு செய்கிறோம் என்று சிலர் கூறுகின்றனர். என்ன ஆதாரத்தை வைத்து அவர்கள் இப்படி கூறுகின்றனர் என்று தெரியவில்லை. பசுமைவழிச் சாலை என்பது மத்திய அரசின் கீழ் வருகின்ற திட்டம். மாநில அரசுக்கும் இதற்கும் தொடர்பில்லை. எனவே, கமிசனுக்காக இந்த திட்டத்தை செயல்படுத்த முயல்கிறோம் என்பது பச்சை பொய்” என்று குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.