நல்லிணக்கம், நல்லாட்சி பற்றி பேசுவது விழலுக்கிறைத்த நீர்!

வடமாகாணத்திற்கான தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் அலுவலகம் நேற்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டபோது இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தனது உரையில் குறிப்பிடுகையில்,

மொழிகளுக்கிடையிலான உறவு நிலைகள் என்பது இந்த மண்ணிலே மிகமிக தேவையான ஒன்றாகக் காணப்படுகின்றது. அந்த மொழிகள் தான் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு அடித்தளமாக அமைந்திருந்தது.

ஆனால் இன்றும் அது சரியான பாதையில் கொண்டு செல்லப்படுகின்றதா? என்ற கேள்வி எல்லோரிடமும் இருக்கின்றது.

மிக முக்கியமாக எழுபது எண்பது ஆண்டுகளுக்கு மேலாக இந்த மண்ணிலே புரையோடிப்போயுள்ள இனங்களுக்கிடையிலான ஒரு வேற்றுமை சரியான இதயசுத்தியோடு தீர்க்கப்படாத எந்த சந்தர்ப்பத்திலும் நல்லிணக்கம் பற்றியோ பல்லினத்துவம் பற்றியோ நல்லாட்சி பற்றியோ நாங்கள் பேசிக்கொள்வது விழலுக்கு இறைத்த நீராகவே மாறும்.

ஆகவே இந்த நாட்டிலே எண்பது ஆண்டுகளுக்கு மேலாக காணப்படுகின்ற பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதைதான் தமிழர் தரப்பாகிய நாங்கள் அதிகமான அக்கறையை கொண்டிருக்கின்றோம்.

அதற்காக தான் நாங்கள் இந்த அரசோடு பல விட்டுக்கொடுப்புக்களைச் செய்து இந்த அரசோடு பேச வேண்டிய பல சந்தர்ப்பங்களும் எங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

குறிப்பாக, இந்த மண்ணிலே நடந்த பெரும் போர் அனர்த்தங்களுக்கு பிற்பாடு குறிப்பாக 2001 முதல் 2005ம் வரையான சமாதான காலத்தில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் மனோ கணேசன் அவர்கள் சந்தித்து சென்றிருந்தார். அந்த காலம் இந்த மண்ணிலே நடைபெற்றிருக்கின்றது.

தற்போது அமைச்சராக இந்த அலுவலகத்தை திறந்து வைப்பதும் இருவேறுபட்ட கால அடையாளங்களை கொண்டது. ஆனால் அந்த கால அடையாளம் என்பது ஒரு இனம் இன்னமும் தன்னுடைய சரியான நேர்த்தியான பாதையில் தன்மை அடையாளப்படுத்த முடியாதுள்ளது என்பதை நாங்கள் யாரும் நிராகரிக்க முடியாது.

இந்த மண்ணில் இவ்வாறு நிகழ்வுகளை நடத்தும் போது தான் இறுதி யுத்தத்தில் காணாமல் போன பல்லாயிரக்கணக்கானவர்களுடைய குடும்பங்கள் 500 நாட்களை கடந்து இந்த மண்ணிலே போராடி வருகின்றனர். நீதி கேட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

காணிகளுக்கு செல்ல வேண்டிய மக்கள் காணிக்கு செல்ல விடுங்கள் என்று போராடிக் கொண்டிருக்கின்றனர்.

இன்று இதே மேடையில் நல்லிணக்கம் பற்றி பேசுகின்ற நேரத்தில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தினூடாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள காணிகளை மகாவலித் திட்டத்தில் கொடுத்து சிங்கள மக்களை குடியேற்ற அனுமதியுங்கள் என்ற கடிதம் கட்டாயப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது.

நியமனக் கடிதங்கள் இப்போதும், சிங்களத்தில் தான் வருகின்றது அண்மையில்; தொண்டராசிரியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து நியமனம் கடிதங்களும் சிங்களத்தில் தான் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த மக்கள் கண்ணீரோடு தான் வாழ்கின்றனர்.

அம்மையார் அமைச்சர் தலதா அத்துக்கொரள அவர்கள் இங்கு வந்திருக்கின்ற பொழுது தான் இதே மண்ணிலே ஆனந்த சுதாகரனுடைய இரண்டு பிள்ளைகள் ஜனாதிபதி வரை சென்று தங்கள் தாயார் இறந்த நிலையில் தந்தையை விடுதலை செய்யுமாறு கேட்டும் இந்த மண்ணில் உறவுகளுடன் வாழ்க்கின்றனர்.

இங்கு சிங்கள மொழியில் தான் பொலிஸ் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. 95 வீத சிங்களவர்களும் 05 வீதம் தமிழர்களும் பொலிஸ் நிலையங்களில் பணிபுரிகின்றனர் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.