குற்றச்செயல்களின் புகலிடமா யாழ்ப்பாணம் ?

யாழ்ப்பாணத்தில் சமீப காலமாக அதிகரித்துவரும் வாள் வெட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை அடுத்து “வாள்ப்பாணம்” அன்புடன் வரவேற்கின்றது என்ற கார்ட்டுன் ஒளிப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குற்றச்செயல்களின் புகலிடமா யாழ்ப்பாணம் ?

இன்னும் ஒரு பாடசாலைச் சிறுமி, “ஈழத் தமிழர்களுடைய கலாச்சாரத் தலைப்பட்டினம்” என்று புகழப்படும் வரலாற்றுச் சிறப்புடைய பிரதேசத்தில் கடந்தவாரம் பலியிடப்பட்டிக்கிறார். பலியிடப்பட்டவர் காட்டுப்புலம் அ.த.க. பாடசாலையில் முதலாவது ஆண்டில் படித்துக் கொண்டிருக்கும் ஆறு வயதுடைய றெஜினா என்ற சிறுமி. யாழ்ப்பாணத்திலுள்ள (சுழிபுரம்) காட்டுப்புலம் என்ற கிராமத்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் வழியில் இனந்தெரியாதோரினால் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

பிள்ளையைக் காணவில்லை என்று தேடிய அயலவர்கள், சடலத்தையே கிணறு ஒன்றில் இருந்து மீட்டுள்ளனர். கொலையாளிகள் என்ற சந்தேகத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வழக்கு விசாரணைகள் நடக்கின்றன. இந்தக் கொலை அல்லது றெஜினாவின் கதை இரண்டு மூன்று நாள் ஊடகச் செய்திகளோடு கரைந்துபோய் விட்டது. இனி அவ்வப்போது நடக்கும் வழக்கு விசாரணைகளில் மெல்லியதாக எழுந்தடங்கும். ஏற்கனவே நடந்த இதைப்போன்ற பல கொடுஞ்செய்திகளை எல்லோரும் மறந்து விட்டனர். ஒவ்வொருவருக்கும்தான் எவ்வளவு பிரச்சினைகள்? அதற்குள் இதையெல்லாம் நினைவில் வைத்திருக்க முடியுமா என்ன? இதற்கிடையில் இன்னொரு செய்தி வந்து புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கதையைப்போல இதை மறைத்து விடும்.

றெஜினாவின் கொலைக்கான நீதியைத் தேடி நெடுந்தூரம் பயணிக்கும் வசதியோ ஆற்றலோ அவருடைய பெற்றோருக்கில்லை. அவர்களுக்கு யாரும் முன் வந்து ஆதரவளிக்கப்போவதுமில்லை. சிறுவர் உரிமை அமைப்புகள் சில நாட்களுக்கு இதில் முன்னின்று செயற்படும். பிறகு அவையும் சோர்ந்து விடும். நல்லெண்ணம் கொண்டோர் சிலர் கொதிப்போடிருப்பார்கள். அவர்களும் ஒரு கட்டத்தில் எதுவும் செய்வதற்கில்லை என நம்பிக்கை இழந்து விடுவார்கள்.

சில மாதங்களோ சில வாரங்களோ கழிய மீண்டும் இன்னொரு கொலையும் வல்லுறவும் நடக்கும். அதற்கும் இதே கதைதான். இப்படியே பண்பாட்டுத்தலைப்பட்டினம் தன்னுடைய புகழைப் பெருக்கிக் கொண்டேயிருக்கும்.00

“றெஜினா கெட்டிக்காரப் பெண். முதல் ஆண்டிலே முதல் நிலைப் பிள்ளை. அவளுடைய குடும்பம் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருந்தாலும் றெஜினா திறமையில் மேலோங்கியிருந்தாள். அவளை இழந்து விட்டோம் என்று அவருடைய ஆசிரியர்கள் கண்ணீரோடு சொல்கிறார்கள்.

றெஜினாவின் குடும்பம் மிக வறியது. தாயும் தந்தையும் கூலி உழைப்பாளிகள். அதைப்போலக் காட்டுப்புலம் கிராமமும் மிகவும் பின்தங்கியதே. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தோல் தொற்று நோய்க்குட்பட்டவர்களின் பிரதேசம் என்று பலராலும் ஒதுக்கி விடப்பட்டிருந்தது. பிறகு அதிலிருந்து அது மீண்டு வந்தாலும் வளர்ச்சியடையாத பிரதேசமாகவே இன்னும் இருக்கிறது. சரியாகச் சொன்னால் “காட்டுப்புலம்” என்ற அதனுடைய பெயருக்கு ஏற்றமாதிரி ஒதுக்கி விடப்பட்ட பிரதேசமாகவே இன்னும் இருக்கிறது. அங்குள்ள சனங்கள் உடலுழைப்பாளர்கள். அதிலும் பெருமளவானர்கள் கூலிகள். ஆண்கள் பெரும்பாலும் வெளியிடங்களுக்கே வேலைக்குப் போகிறார்கள். அப்படிப் போகின்றவர்கள் வெளியிடங்களிலேயே தங்கவேண்டியிருக்கிறது.

ஊரிலிருப்போரில் ஒரு தொகுதியினர் கசிப்புக் காய்ச்சி விற்கிறார்கள். போதாக்குறைக்கு இன்னொரு தொகுதியினர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுகிறார்கள். கசிப்புக்கும் கஞ்சாவுக்கும் என ஊருக்குப் பலரும் வந்து போகிறார்கள். இதற்கெல்லாம் வசதியாக காட்டுப்புலம் கிராமத்தின் அமைவிடவும் அபிவிருத்தியடையாத நிலையும் உள்ளது. கடற்கரைப்பக்கமாக கவனிக்கப்படாத வளவுகளும் பற்றைக் காடுகளும் குற்றச்செயல்களுக்குப் பெருவசதி.

இதைப்பற்றிய முறைப்பாடுகளை அரச அதிகாரிகளுக்கு யாராவது கொண்டு போனால், பார்க்கலாம். கட்டுப்படுத்துவதற்கு முயற்சிக்கிறோம்” என்ற மாதிரியான பதில்கள் சொல்லப்படும். நடவடிக்கையில் எத்தகைய முன்னேற்றமும் இருக்காது. பொலிஸின் கதையும் இதுதான். இந்த மாதிரித் தவறான காரியங்களில் யாராவது கைது செய்யப்பட்டாலும் அவர்களைத் தொடர்ந்து வந்து ஏனைய குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதோ கைது செய்வதோ கிடையாது. அப்படித்தான் தப்பித்தவறி யாரேனும் கைது செய்யப்பட்டால் – பிடிபட்டால் – இரண்டொரு வாரங்களில் கைதானவர் வீதியிலே சீட்டி அடித்துக் கொண்டு போவார்.

காட்டுப்புலத்தின் சமூக பொருளாதார கல்வி நிலையை மேம்படுத்த வேணும். அதை ஒதுக்கி விடக்கூடாது என்று சிலர் தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறார்கள். குற்றச்செயல்கள் நடப்பதற்கான களத்தையும் வாய்ப்பையும் நாம் கொடுத்து விடக்கூடாது எனவும் எச்சரித்திருக்கிறார்கள்.

ஆனால், யாரும் அதைப் பொருட்படுத்தியதில்லை. அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் எப்படியோ சிரமப்பட்டு அங்கே போய் வாக்கு வேட்டையாடுவதுண்டு. அதற்குப்பிறகு அந்தப் பக்கம் திரும்பியும் பார்க்க மாட்டார்கள். அரசியல்வாதிகளைத் தொடர்பு கொண்டு பேசக்கூடிய அளவுக்கு காட்டுப்புலவாசிகளுக்குத் தொடர்பும் இல்லை. அதிகாரிகள் அங்கே போவதேயில்லை. அப்படிச் சென்றாலும் அங்கே மாற்றங்களை உருவாக்கும் அளவுக்கு திட்டங்களை உருவாக்குதோ நிதி ஒதுக்கீடுகள், முன்னேற்ற நடவடிக்கைகளைச் செய்வதோ கிடையாது.

இப்படியான நிலையில் கசிப்பு, கஞ்சா போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோருக்குக் காட்டுப்புலம் மிக்க வசதியாகி விட்டது. கசிப்பும் கஞ்சாவும் ஆட்களை மாற்றிச் சிதைத்து விடும். அதிலும் கஞ்சா என்ன செய்யும் என்று யாராலும் சொல்லி விட முடியாது. அது உண்டாக்கும் போதையும் அதன் மனநிலையுமே இப்பொழுது றெஜினாவைக் கொன்றிருக்கிறது.

கொலை செய்யப்பட்ட றெஜினாவின் உடல் மருத்துப் பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டது. அவர் பாலியல் துஸ்பியோகங்களுக்குட்ட தடயங்கள் இல்லை என மருத்துவ அறிக்கை கூறுகிறது.

இதைப்பற்றி யாழ்ப்பாணத்திலுள்ள பொறுப்புமிக்க வைத்திய அதிகாரி ஒருவருடன் நேரிலே பேசியபோது, இந்தக் கொலைக்குக் காரணம், போதைப்பொருளைப் பாவிப்பவர்களாகவே இருக்கும். அவர்களுடைய போதைப் பொருட்தேவைக்கான பணத்துக்காக றெஜினா கொல்லப்பட்டிருக்கலாம் என்றார் அவர்.

றெஜினாவின் காதில் இருந்த அந்தச் சின்னஞ்சிறிய தோடுகளுக்காக போதைப்பொருட் பாவனையாளர்கள் றெஜினாவைக் கொன்றிருக்கிறார்கள் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சிலவேளை விசாரணைகளில் இதனுடைய உண்மை துலங்கக் கூடும்.

எப்படியோ கொலை இந்தளவுக்கு மலிந்து விட்டது.

இதற்கான பொறுப்பை யாழ்ப்பாணச் சமூகமே முதலில் ஏற்க வேணும். காட்டுப்புலத்தைப்போல பல கவனிக்கப்படாத புலங்களின் மையமாகி விட்டது யாழ்ப்பாணம். நகரத்தையும் அதைச் சுற்றியிருக்கும் சிறு பட்டினங்களையும் சில கிராமங்களையும் விட பல பிரதேசங்களும் கவனிக்கப்படாதே உள்ளன. அங்கெல்லாம் இப்பொழுது மக்கள் இல்லை. ஆனால், முன்பு ஒரு காலம் அங்கெல்லாம் சனங்களும் குடியிருப்புகளும் நிறைந்திருந்தன. போக்குவரத்தும் சனப் புழக்கமுமிருந்தது. இப்பொழுது இடப் பெயர்வுகளாலும் போரினாலும் பலர் தங்கள் சொந்தக் கிராமங்களிலிருந்து வெளியேறிப் போய் விட்டனர். அவர்களில் பலர் மீளத்திரும்பி ஊர்களுக்கு வரவில்லை. இனி வரப்போவதுமில்லை. அதாவது மீள வந்து ஊர்களில் இருக்கப்போவதில்லை.

ஆனாலும் தாங்கள் முன்னர் இருந்த காணிகளை யாருக்கும் விற்க மாட்டார்கள். அவற்றை மீளத்திருத்தி மக்களுக்குரியவாறு மாற்றிக் கொள்ளவும் மாட்டார்கள். அக்கம் பக்கத்திலிருப்போர் அச்சத்தோடு வாழும் நிலையிலேயே பாம்பும், பூச்சியும் விளையும் நிலங்களாக மாறிப்போயுள்ளன. பூதம் காத்த கோட்டைகளைப்போல காடும் புதரும் மண்டிய காணிகளாகவே அவையெல்லாம் கவனிப்பாரற்றே கிடக்கின்றன. குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு இதெல்லாம் மேலும் ஊக்கத்தைக் கொடுக்கிறது.

இதை விட மோசமானது, இவ்வாறான இடங்களில் நடக்கும் குற்றச்செயல்களையும் சட்டவிரோத நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறையை யாரும் அமூல் படுத்த முடியாது. ஒன்று இந்தச் செயல்களில் ஈடுபடுவோரின் அச்சுறுத்தல். இரண்டாவது இதைக் கட்டுப்படுத்த வேண்டிய பொலிஸ் மற்றும் அரச அதிகாரிகளின் பொறுப்பின்மை அல்லது ஒத்துழைப்பு.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறது, யாழ்ப்பாணச் சமூகம்.

இரண்டாவது பொறுப்பு மாகாணசபைக்கும் அரசாங்கத்துக்குமுரியது. தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் கொலையும் களவு, வன்முறைச் சம்பவங்கள், போதைப்பொருள் விற்பனை – பாவனை போன்றவையும் நடக்கும்போது இதையெல்லாம் கட்டுப்படுத்தாமல் மாகாணசபையும் மத்திய அரசாங்கமும் இருப்பது ஏன்? தங்களுக்கு அதிகாரமில்லை என்று ஒற்றைச் சொல்லோடு மாகாணசபை விலகி விடமுடியாது. பதிலாக இதற்கான பொறுப்பை ஏற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேணும்.

ஒரு பிரதேசத்தில் நடக்கின்ற ஏதோ ஒரு சில சம்பவங்களை வைத்துக் கொண்டு அந்தப் பிரதேசத்தின் நிலையைப் பற்றி மதிப்பிடலாமா? அந்தப் பிரதேசத்தைப்பற்றிய விமர்சனங்களை முன்வைக்கலாமா? அதுவும் யாழ்ப்பாணம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, பாரம்பரியப் பெறுமானங்களை உடைய பிரதேசத்தின் மீது எழுந்தமானமாக இவ்வாறு கண்டனங்களையும் மதிப்பிறக்கம் செய்கிற மாதிரியான விமர்சனங்களை வைப்பது முறையில்லை என்று சிலர் சொல்லக் கூடும்.

அவர்களிடம் நாம் மிக எளிய கேள்விகளைப் பதிலாகக் கேட்கலாம்.

றெஜினாவின் கொலை ஒன்றும் அபூர்வமாக நடந்த விசயமல்ல. அல்லது இதுதான் முதல் கொலையும் அல்ல. கடந்த ஆண்டு புங்குடுதீவில் இன்னொரு பாடசாலை மாணவியான வித்தியா கூட்டு வல்லுறவுக்குட்பட்டுக் கொல்லப்பட்டார். றெஜினா கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குள் அதே சுழிபுரம் பகுதியில் முதிய பெண்ணொருவர் (59 வயது) யாரோ இரண்டு பேரினால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார். இதற்கு முன்னும் முதலும் இவ்வாறு பல சம்பவங்கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் நடந்திருக்கின்றன. வாள் வெட்டு, அடிதடி, கொள்ளை, களவு, வன்புணர்ச்சி, கொலை என கட்டற்று நீண்டு செல்கின்றன குற்றச்செயல்கள்.

பொலிஸ் மேற்கொண்ட கட்டுப்பாட்டு நடவடிக்கையின்போது இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் பலியானதும் நிகழ்ந்திருக்கிறது. பல நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பலர் நீதிமன்றத்தின் மூலமாகத் தண்டனைக்குள்ளாகியிருக்கிறார்கள்.

ஆனாலும் குற்றச்செயல்கள் குறையவில்லை. கொலைகளும் பலியும் நிற்கவில்லை. பதிலாகக் கஞ்சா, மது உள்ளிட்ட போதைப்பாவனை பெருகியிருக்கிறது. இதனால் பாதிக்கப்படுவோரின் தொகையும் கூடியிருக்கிறது. வாராவாரம் கஞ்சாவும் போதைப்பொருட்களும் பொலிசாரினால் கைப்பற்றப்படுவதாகப் பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. செய்திகளும் இதை நிரூபிக்கின்றன. அப்படியென்றால் கைப்பற்றப்படாத பெருமளவு கஞ்சா வேறு எங்கோ பயன்பாட்டிற்குச் சென்று விடுகிறது. தற்போது கிடைக்கின்ற தகவல்கள், பாடசாலை மாணவர்களும் இந்தப் போதைப் பொருட்பாவனைக்குட்பட்டுள்ளனர் என்று சொல்கின்றன. இதெல்லாம் நல்ல சகுனங்களோ மகிழ்ச்சியான சேதியோ அல்ல.

இதற்குக் காரணம் படைத்தரப்பே என்று தமிழ் அரசியற் தரப்பினரும் ஊடகத்துறையினரும் எளிதாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் இதைக்குறித்து முறையாக பாராளுமன்றத்திலோ அரச தலைவர் மட்டத்திலே யாரும் பேசியதாக இல்லை. குறைந்த பட்சம் இதைப்பற்றி மாகாணசபை கூடப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. முதலமைச்சர் இந்த நிலைமையைக் குறித்து பொலிஸ் மற்றும் சட்டத்துக்குப் பொறுப்பான பிற தரப்புகள், சமூ அமைப்புகள், மருத்துவத்துறை போன்றவற்றோடு கலந்தாலோசித்திருக்க வேணும். அதுவும் நடக்கவில்லை. சமூக மட்டத்தில் கூட யாரும் இதைக்குறித்து அக்கறைப்பட்டதாகவும் கவலைப்பட்டதாகவும் இல்லை. தனிப்பட்ட கவலைகள் இருக்கக் கூடும். அதற்குச் சமூகப் பெறுமானமும் நடவடிக்கைப் பெறுமானமும் இல்லை. கூட்டுக் கவலையும் கூட்டு அக்கறையுமே செயற்பாட்டுப் பலத்தைப் பெறும். அந்த வகையில் எந்த நற்காரியங்களும் நிகழவில்லை.

ஆகவே சமூகம் பாதுகாப்பற்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையைச் சமாளிப்பதற்காக (கட்டுப்படுத்துவதற்காக அல்ல) வடக்கின் கல்வி அமைச்சர் ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார். இதன்படி இனிமேல் பாடசாலைகளில் இருந்து ஆரம்ப வகுப்புப் பிள்ளைகளை அவர்களுடைய பெற்றோரும் பாதுகாவலர்களுமே வந்து அழைத்துச் செல்ல வேணும் என்றிருக்கிறார் கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன். மேலோட்டமாகப் பார்த்தால் இந்த அறிவிப்பு ஏதோ பாதுகாப்பானதாகத் தோன்றலாம். ஆனால், இது சமூகப்பாதுகாப்பற்ற நிலையையும் அதைச் சீர் செய்ய முடியாததையுமே உணர்த்துகின்றது.

அப்படியென்றால் வித்தியா போன்ற வயது வந்த பிள்ளைகளுடைய பாதுகாப்புக்குப் பதில் என்ன? இதற்கு சர்வேஸ்வரன் என்ன சொல்வார்?

முன்னர் இந்த மாதிரியான கொலைகளுக்குக் காரணமாகப் படைத்தரப்புக் குற்றம் சாட்டப்பட்டது. கிரிஷாந்தி, ரஜனி போன்றவர்கள் அவ்வாறு படையினரால் சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்ததும் உண்மை. இன்று நடப்பவை அப்படியல்ல. regina5

பண்பாட்டிலும் நாகரீகத்திலும் அறிவிலும் வளர்ச்சியடையும் சமூகத்தில், பிரதேசத்தில், வரலாற்றுச் சிறப்புடைய நகரத்தில் எப்படி இவ்வாறு கீழ்மையான விசயங்கள் நடந்தேறும்? இதைக்குறித்து ஏன் பொறுப்பானவர்கள் சிந்திக்கவில்லை? பொறுப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை?

இதைக்குறித்து எழுத்தாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் பின்வருமாறு குறிப்பிட்டதை இங்கே குறிப்பிடுவது அவசியமாகும்.“ ஒரு நாடு எப்படியிருக்கிறது என்பது அந்நாட்டில் பெண்கள் எப்படி நடத்தப் படுகிறார்கள் என்பதிலிருந்து கண்டு கொள்ளலாம். இன்று பாடசாலை செல்லும் இளம் குழந்தைகள்,பல்கலைக்கழகம்செல்லும் இளம் பெண்கள், வேலைசெய்யுமிடங்களில் பல பெண்கள் என்று பலர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள். வேலிகளே பயிர்களை மேய்கின்றன. தட்டிக் கேட்க ஆளில்லாத சமுதாயமாகத் தமிழ்ச்சமுதாயம் தடுமாறித் தவிக்கிறது. தலைவர்களோ படாடோபமான பாதுகாப்புடன் செல்வம் கொழிக்க வலம் வருகிறார்கள். மக்களுக்கும் அவர்களுக்கும் ஆக்க பூர்வமான எந்தத் தொடர்பும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

கண்ணிருந்தும் குருடர்களாக,காதிருந்தும் செவிடர்களாக, அறிவிருந்தும் மூடர்களாக வலம் வரும் இந்த அரசியல்வாதிகளுக்கு அண்மையில் சுழிபுரத்தில் நடந்த ஆறுவயதுக்குழந்தை றெஜினாவின் கொடிய கொலை மனத்தை உருக்காவிட்டால், பொது மக்களின் பாதுகாப்பு, போன்ற அத்தியாவசிய விடயங்களை முன்னெடுத்து அவர்களைத் தெரிவு செய்த மக்களின் வாழ்வுக்கு நன்மை செய்யாவிட்டால், இவர்கள் மனிதர்கள் என்ற பெயரில் வாழும் ஈனப் பிறவிகளாகும்”.

ஆகவே இனியும் இந்த நிலை நீடிக்காது, இந்தக் கொலைகள் நீளாது தடுப்பதற்கு வழியேற்படுத்த வேணும். அது வேறு யாருடைய கடமையும் அல்ல. நமது பொறுப்பாகும். நாம் பொருத்தமானவர்களை அதிகாரத்தில், ஆட்சியில் அமர்த்தாதவரையில், இந்த அவலங்கள் தொடரும்

கருணாகரன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.