ராக்கெட் ராஜா மீதான குண்டர் சட்டம் ரத்து!

ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டது.
திசையன் விளை அருகே ஆனைமுடியை சேர்ந்தவர் ராக்கெட்
ராஜா. இவர் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டவர். கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி நெல்லை, அண்ணாநகரில் கல்லூரி பேராசிரியர் செந்தில்குமார் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கில் முதல் குற்றவாளியாக தேடப்பட்டார். சென்னை போலீசாரால் மே 9 ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இவர் மீது நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் கபில்குமார் சரத்கர் உத்தரவின்படி, ஜூன் 9 ஆம் தேதி குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து ராக்கெட் ராஜா சார்பில் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில், முறையாக ஆவணங்கள் இன்றியும் விதிமுறைகளை பின்பற்றாமலும் தன்மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய நெல்லை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தன்னுடைய உறவினருக்கும் போலீசார் தெரிவிக்கவில்லை. கைது செய்யப்பட்டு பல நாட்கள் கழித்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், என் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து என்னை விடுதலை செய்ய வேண்டும் என கூறியிருந்தது.
இந்த மனு இன்று(ஜூலை 10) நீதிபதிகள் சி. டி. செல்வம், பஷீர் அகமது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், ராக்கெட் ராஜா மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

No comments

Powered by Blogger.