நிவின் பாலியின் ‘பிக் பட்ஜெட்’ படம்!

நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் காயம்குளம் கொச்சுண்ணி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
1830களில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கேரளாவில் வசதி
படைத்தவர்களிடம் இருந்து பொருள்களைத் திருடி ஏழைகளுக்கு அளித்து வந்தார் காயம்குளத்தைச் சேர்ந்த கொச்சுண்ணி. இவரது வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகும் படம் காயம் குளம் கொச்சுண்ணி. மலையாள சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்த நிவின் பாலிக்கு இது மாறுபட்ட படம்.
பாபி, சஞ்சய் திரைக்கதை அமைக்க ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கி வருகிறார். படம் முழுக்க ஏராளமான சண்டைக்காட்சிகள் இடம்பெற்றிருப்பதை ட்ரெய்லரை பார்க்கும் போது அறியமுடிகிறது. ‘இதிக்கார பக்கி’ என்ற கதாபாத்திரத்தில் கொச்சுண்ணியின் நண்பராகவும் ஆலோசகராகவும் மோகன் லால் நடித்துள்ளார். ட்ரெய்லரின் இறுதியில் ஒரு காட்சியில் மட்டும் தோன்றுகிறார்.
இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த கொச்சுண்ணி தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணான ப்ரியா ஆனந்த் மேல் காதல் கொள்கிறார். அதன் மூலம் உருவாகும் வன்முறையும் ட்ரெய்லரில் காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு வரைமுறைகளை வகுக்கும் மனு தர்மத்தை விமர்சித்து வசனங்கள் வைக்கப்பட்டுள்ளன.
பிரியங்கா திமேஷ், சன்னி வாய்ன், பாபு ஆண்டனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இசையமைக்க, ஸ்ரீ கோகுலம் பிலிம்ஸ் 45 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கிறது. நிவின் பாலி நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் இதுவாகும்.
Powered by Blogger.