மலேசியா செல்லும் விஜய் சேதுபதி டீம்!

நடிகர் விஜய் சேதுபதி, அஞ்சலி நடிப்பில் இயக்குநர் அருண்குமார் இயக்கிவரும் திரைப்படத்திற்கான படப்பிடிப்பிற்காகப் படக்குழுவினர் மலேசியா செல்லவுள்ளனர்.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக நடிக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தென்காசியில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்காகப் படக்குழுவினர் மலேசியா செல்லவிருக்கின்றனர்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, இதுவரை அதிகம் யாரும் முயற்சி செய்யாதது மாதிரியான ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ஜுங்கா படத்தின் படப்பிடிப்பு பாரிஸில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அருண்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்புக்காக மலேசியா செல்லவிருக்கிறார் விஜய் சேதுபதி. அங்கு முப்பத்தைந்திலிருந்து, நாற்பது நாட்களுக்குள் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
எஸ்.என் நாகராஜாவின் ‘கே’ புரொடெக்‌ஷன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர்.ஃபிலிம் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறார்கள். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி, இறைவி படத்திற்கு பின் இணைந்துள்ளார். இவர்களோடு லிங்கா மற்றும் விவேக் பிரசன்னா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்தப் படத்தை விரைவில் முடிக்க திட்டமிட்டிருக்கிறார் இயக்குநர் அருண்குமார்.
விஜய் சேதுபதி இதனையடுத்து சிரஞ்சீவி நடிப்பில் உருவாகிவரும் தெலுங்கு படமான சை ரா நரசிம்ம ரெட்டி, மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம், சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, 96 ஆகிய படங்களிலும் கவனம் செலுத்திவருகிறார்.

No comments

Powered by Blogger.