மேட்டூர் அணை நிரம்பியது - காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பின.

இதையடுத்து இந்த 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணை நிரம்பிய பிறகும் மழை நீடித்து வருவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக உள்ளது.

இதன் காரணமாக அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே காவிரியில் திருப்பி விடப்படுகிறது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 51 ஆயிரம் கன அடி தண்ணீரும் கபினி அணையில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் சீறிப்பாய்ந்து வருகிறது.இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 17-ந் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 117.40 அடியாக உயர்ந்தது.

அணைக்கு நேற்று 61 ஆயிரத்து 226 கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை இது அதிகரித்து 68 ஆயிரத்து 489 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இன்று காலை நீர்மட்டம் 119.41 அடியாக உயர்ந்தது. இன்று பிற்பகல் அல்லது மாலை அணை நீர்மட்டம் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

84 ஆண்டுகால மேட்டூர் அணை வரலாற்றில் 39-வது முறையாக இந்த ஆண்டு அணை நிரம்புவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 19-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்காக 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக உள்ளதாலும் அணை நிரம்பும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாலும் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நேற்று இரவு 8 மணி முதல் வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர் மின்நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக 22 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும், அணையின் 16 கண் பாலம் வழியாக 7 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் இரவு 10 மணி முதல் மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு பாசன கால்வாய்க்களில் வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வீதம் திறக்கப்பட்டது. இன்று காலை முதல் இது 300 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் கால்வாய் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

அணையின் நீர் இருப்பை பொருத்து கால தாமதமாகவோ குறித்த காலத்திலோ தண்ணீர் திறந்துவிடப்படும். இந்த ஆண்டு பருவமழை தீவிரம் அடைந்து மேட்டூர் அணை நிரம்பியதால் முன்னதாகவே கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

விவசாயிகளின் தேவைக்கேற்றவாறு கால்வாய் பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படும்.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டு உள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே காவிரி கரையோரங்களில் வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு 12 மாவட்டங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்ட உள்ளது.

சேலம் மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகளான புள்ளாகவுண்டம் பட்டி, கோனேரிப்பட்டி, காவேரிப்பட்டி அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஆற்றின் கரையோரம் குளிப்பது, நீச்சல் அடிப்பது கரையில் நின்று வேடிக்கை பார்ப்பது, படம் எடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது உடமைகள், கால்நடைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-ல் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி கரையோர கிராமப் பகுதிகளில் வருவாய்த்துறையினர் ஆட்டோ மற்றும் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை செய்து வருகின்றனர். எடப்பாடி பகுதியில் உள்ள காவிரி கரையோர கிராமங்களான பூலாம்பட்டி, நெடுங்குளம், கூடக்கல், குப்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆற்றின் பல்வேறு பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் நடப்பட்டுள்ளதோடு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகமாக உள்ளதால் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் காவிரி கரையோரம் வருவாய்த்துறையினரும், தீயணைப்பு துறையினரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

உபரி நீர் திறக்கப்பட்டுள்ள மேட்டூர் அணை 16 கண் பாலம் பகுதியில் கருமலைக்கூடல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 16 கண் பாலத்திற்கு மாற்றாக அமைக்கப்பட்டு உள்ள புதிய பாலத்தில் நெடுஞ்சாலைத்துறை போலீசார் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் 5 ஆண்டுகளுக்கு வருண பகவான் கருணை காட்டியதால் பலத்த மழை பெய்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த ஆண்டு ஜூலை மாதமே அணை நிரம்பி உள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் வெறும் 38 அடியாகத்தான் இருந்தது. நீர்வரத்தும் மிக குறைவாக காணப்பட்டது. இதன் காரணமாக டெல்டா பாசனத்திற்காக மிகவும் கால தாமதமாக அக்டோபர் மாதம் 2-ந் தேதி தான் அணையில் இருந்து தண்ணீரி திறக்கப்பட்டது. ஆனால் நீர்மட்டம் 100 அடியை கூட எட்டாததால் சென்ற ஆண்டு டெல்டா பாசனம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணை நிரம்பியதால் சம்பா பருவ நெல் சாகுபடி அமோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்

No comments

Powered by Blogger.