ஓய்வை அறிவித்த இந்திய வீரர்!

இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் முகமது கைப், அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2002ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்திருந்தது. இந்திய அணி மிடில் ஆர்டரில் தடுமாறிய காலகட்டம் அது. அந்தத் தொடரின் முதல் மூன்று ஆட்டத்தில் இந்திய அணி இரண்டை வென்றிருந்தாலும் அணியில் விவிஎஸ் லக்ஷ்மனின் செயல்பாடு கேப்டன் கங்குலிக்கு திருப்தியளிக்கவில்லை. அந்தத் தொடரின் நான்காவது போட்டியில் லக்ஷ்மனுக்கு பதிலாக முகமது கைப்புக்கு இந்திய அணியில் முதல் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கைப் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியிருந்தாலும் அணியின் வெற்றிக்கு அவரது பங்களிப்பு பெரியளவில் இருந்ததில்லை. இங்கிலாந்துத் தொடரில் கடைசி 3 போட்டிகளில் 2 இன்னிங்ஸில் விளையாடும் வாய்ப்பைப் பெற்ற கைப் முறையே 46 மற்றும் 20 ரன்கள் எடுத்திருந்தார்.
2002ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நாட்வெஸ்ட் தொடரை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
அந்தக் காலகட்டத்தில் இந்திய அணியின் துடிப்பான ஃபீல்டர்கள் என்றால் முதலில் ஞாபகத்துக்கு வருவது கைப், யுவராஜ் சிங் இருவரது பெயர்கள் தான். பெரும்பாலும் பாய்ன்ட் மற்றும் ஸ்கொயர் லெக் திசையில் ஃபீல்ட் செய்யும் இவர்களைத் கிளியர் செய்வதற்குள் பேட்ஸ்மேன்கள் ஒருவழி ஆகிவிடுவார்கள். பல முக்கிய தருணங்களில் இவர்களது அற்புத கேட்ச்களால் ஆட்டத்தின் முடிவே மாறியிருக்கிறது. 2006ஆம் ஆண்டு தென்னாப்ரிக்க அணியுடன் போர்ட்எலிசபெத் நகரில் ஆடிய ஒருநாள் போட்டி, சர்வதேச அளவில் இவரது கடைசி ஒருநாள் போட்டியாகும்.
இன்று (ஜூலை 13) அனைத்துச் சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக கைப் பிசிசிஐ நிர்வாகிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "முதல்தர போட்டிகள் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க நாட்வெஸ்ட் தொடரை வென்று இன்றுடன் (ஜூலை 13, 2002) 16 ஆண்டுகள் ஆயிற்று. அதில் எனது பங்கு இருப்பதை நினைத்து பெருமையாக உள்ளது. இந்திய அணிக்காக இருதுவரை 125 ஒருநாள், 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடிவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.
2000ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற 19வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் முகமது கைப் இடம்பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.