தடையில் இருந்து ஆரம்பம்!

இயக்குநர் மிஷ்கின் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார்.

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியான நிமிர் படத்தையடுத்து, சீனுராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி. இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து அட்லீயின் உதவியாளர் ஒருவருடைய இயக்கத்தில் நடிக்க இருந்தார் உதயநிதி. பின் அந்தப் படம் நின்றுபோனது. இதையடுத்து உதயநிதி அடுத்து நடிக்கும் படம் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.
உதயநிதி நடிக்கும் அடுத்தப் படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்கவுள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். படப்பிடிப்பு ஆகஸ்ட் இரண்டாம் வாரத்திலிருந்து தொடங்கவிருக்கிறது. இந்தப் படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.
மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் துப்பறிவாளன். இந்தப் படத்தில் விஷால் தன் மாறுபட்ட நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து மிஷ்கின் இயக்கும் படத்தில் சாந்தனு ஹீரோவாக நடிப்பதாகச் சொல்லப்பட்டது. அப்படத்தைத் தயாரிக்க முன்வந்த லிப்ரா நிறுவனம் கடைசி நேரத்தில் பின் வாங்கியதால் அந்தப் படம் கைவிடப்பட்டது.
தற்போது அதே கதையில் உதயநிதி நடிப்பதோடு, தனது தயாரிப்பு நிறுவனமான ரெட்ஜெயண்ட் மூலம் தயாரிக்கவும் செய்கிறார். இருவருக்கும் படம் ஆரம்பிப்பதற்கு முன்பே தடைப்பட்டு, தற்போது புதிய படத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.