ஃபீஸ் கட்டாத குழந்தைகளுக்கு சித்ரவதை!

பள்ளிக்கட்டணம் செலுத்தாத 16 மாணவிகளை, வகுப்பறையில் போட்டு 5 மணி நேரத்துக்கும் மேலாக அடைத்து வைத்த தனியார் பள்ளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியின் சாந்தினி சவுக் பகுதியில் இயங்கி வரும் ஒரு பெண்கள் பள்ளியில், நான்கு முதல் ஆறு வயது மட்டுமே உடைய பிரைமரி வகுப்பைச் சேர்ந்த 16 பெண் குழந்தைகளை, கட்டணம் செலுத்தாத காரணத்துக்காக பள்ளி நிர்வாகம் அடைத்து வைத்ததாகச் சொல்லப்படுகிறது. இது கடந்த திங்கட்கிழமை (09-07-2018) அன்று நடந்துள்ளது.
மாலை பள்ளி முடிந்ததும் குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்த பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வகுப்பறையில் தங்கள் குழந்தைகள் இல்லாததைக் கண்டு, ஆசிரியர்களிடம் கேட்டுள்ளனர். கட்டணம் கட்டாததால் அடித்தளத்தில் இருக்கும் அறையில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் சொல்லியிருக்கின்றனர். காற்றுக்குக்கூட வழியில்லாத அந்த அறையில் வியர்த்து, அழுதபடி குழந்தைகள் இருந்திருக்கின்றனர். அடைக்கப்பட்டிருந்த பெரும்பாலான குழந்தைகள் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர். ஆனால், அதற்கான ரசீதை அவர்கள் ஆசிரியர்களுக்குக் காட்டாததால் இந்தக் குழப்பம் ஏற்பட்டதாக பெற்றோர்களிடம் சொன்னது பள்ளி நிர்வாகம்.
எதுவாக இருந்தாலும், தங்கள் குழந்தைகள் இப்படி அடைக்கப்பட்டிருந்ததைத் தாங்காத பல பெற்றோர்கள் சாந்தினி சவுக் காவல் நிலையத்துக்குப் போன் செய்து புகார் தெரிவித்தனர். டெல்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு இயக்கம் (Delhi Commission for Protection of Child Rights) இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு கமிஷனை நியமித்துள்ளது. விசாரணைக்கு பிறகே இதற்கு காரணமானவர்கள் யார் என்று தங்களால் கூற முடியும் என்று கூறியுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்றின் தந்தையான ஜியாவுதீன் கூறுகையில், ‘குழந்தைகளை அடித்தளத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். என் குழந்தைக்கு ஃபீஸ் கட்டிய பிறகும், அடித்தளத்தில் அடைத்து வைத்தனர். குழந்தைகள் தண்ணீர் தாகத்தால் தவித்துள்ளனர். போலீஸ்தான் எங்களுக்கு உதவி செய்து குழந்தைகளை மீட்டுக் கொடுத்தனர். நான் ஃபீஸ் கட்டியதற்கான ரசீதை காட்டிய பிறகும், பள்ளியின் தலைமை ஆசிரியர் என்னிடம் மன்னிப்புக் கேட்கவில்லை’ என்று வேதனையுடன் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ், ‘இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 324 இன் கீழும், சிறார் வன்கொடுமை சட்டம் பிரிவு 75 இன் கீழும் பள்ளிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றும் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.