என் நிலம் என் உரிமை: மார்க்சிஸ்ட் நடைபயணம்!

எட்டுவழிச் சாலையை எதிர்த்தும், ’என் நிலம் என் உரிமை’ என்னும் முழக்கத்தை முன்வைத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி திருவண்ணாமலையிலிருந்து சேலம்வரை நடைபயணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் நேற்றும், இன்றும் சென்னை தி.நகரிலுள்ள அக்கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ.வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் என்கிற பெயரில் விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும், ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் சூறையாடுவதை எதிர்த்து திருவண்ணாமலையிலிருந்து சேலம் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடை பயண இயக்கம் மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ”ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று திருவண்ணாமலையிலிருந்து பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுடன் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் “என் நிலம், என் உரிமை” என்ற முழக்கத்தோடு நடைபயணம் புறப்படுகிறது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“கருத்துரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தியும், அரசு மற்றும் காவல் துறையின் அடக்குமுறைகளை கண்டித்தும் தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது என்றும், சென்னையில் “கருத்துரிமை பாதுகாப்பு மாநாடு” நடத்தப்படும்” என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநிலக் குழுக் கூட்டம் நிறைவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், “தமிழகத்தில் இருக்கக் கூடிய அரசு மூர்க்கத்தனமான அரசாக மாறியிருக்கிறது. ஊடகங்கள் முடக்கப்படுகின்ற, சமூக வலைதளங்களில் கருத்து சொல்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்படுகின்றனர். நோட்டீஸ் அச்சிட்டாலே அச்சகங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கிறார்கள்.
திருமண மண்டபங்களில் கூட்டங்கள் நடத்தக் கூடாது என்று மண்டப உரிமையாளர்களை மிரட்டுகிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைப்பினர் எந்தவித ஆர்ப்பாட்டத்தையும் நடத்தக் கூடாது என்ற நிலையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்துகின்றனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13பேர் இறந்துள்ள நிலையில், இதுபோன்று தமிழகம் முழுவதும் கண்மூடித் தனமான அடக்குமுறையை காவல் துறை மூலம் தமிழக அரசு ஏவிக் கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால் தமிழகத்தில் ஒரு அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது” என்று கடுமையாக விமர்சித்தார்.
எட்டுவழிச் சாலைத் திட்டத்தை அறிவித்து அங்குள்ள விவசாயிகளை பொதுமக்களை கண்மூடித் தனமான அடக்குமுறையில் மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். சேலம்-சென்னைக்கு ஏற்கனவே 3சாலைகள் உள்ள நிலையில், தேவைப்பட்டால் அந்த சாலைகளை விரிவுபடுத்திக் கொள்ளலாம். எனவே நான்காவதாக எட்டுவழிச் சாலை என்பது தேவையில்லை என்றும் பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.