இந்திய வேலைகளைப் பறிக்கும் சீனா!

சீனாவிலிருந்து அதிகளவிலான சோலார் உபகரணங்களை இந்தியா இறக்குமதி செய்து வருவதால் 2 லட்சம் வேலைகளை இழந்துள்ளதாக நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.

புதுப்பிக்கத் தக்க ஆற்றல் உற்பத்தியை மேம்படுத்தும் விதமாக சோலார் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் சோலார் உற்பத்திக்குத் தேவையான உபகரணங்கள் 90 விழுக்காடு அளவுக்கு இறக்குமதி மூலம்தான் பெறப்பட்டு வருகிறது. உள்நாட்டில் சோலார் உபகரணங்கள் மிகக் குறைவான அளவில் உற்பத்தி செய்யப்படுவதும், அவற்றின் விலை அதிகமாக இருப்பதுமே இறக்குமதியை அதிகமாக நம்பியிருப்பதற்குக் காரணமாக உள்ளது.

சீனாவிலிருந்துதான் இந்தியா அதிகளவில் சோலார் உபகரணங்களை இறக்குமதி செய்கிறது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் பொருட்களின் மதிப்பானது இந்தியாவில் 2 லட்சம் வேலைவாய்ப்புகளை அளிக்கக் கூடியது என்று நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் நாடாளுமன்ற நிலைக் குழு அளித்துள்ள தகவலில், ‘நாட்டின் வேலைவாய்ப்புகள் பறிபோவது கவலையளிப்பதாக உள்ளது. இறக்குமதிக் குவிப்பு மற்றும் இதர வரிகளுக்கு எதிரான பொது இயக்குநரகத்தின் (டி.ஜி.ஏ.டி.) செயல்பாடுகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

2006 முதல் 2011 வரையில் அதிகளவில் சீனாவிலிருந்து சோலார் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் சோலார் பொருட்களின் விலை என்னவாக இருந்ததோ அதே விலைக்குச் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இப்போது சீன இறக்குமதி ஒரு நிலையான இடத்தைப் பெற்றுள்ளது. இந்த இறக்குமதிக் குவிப்பைத் தடுக்க அரசு வலுவான நடவடிக்கையை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும், சீனாவுக்குமான வர்த்தகப் பற்றாக்குறை 2017-18ஆம் நிதியாண்டில் ரூ.4,30,305 கோடியாகஅதிகரித்துள்ளது. இது 2016-17ஆம் ஆண்டில் ரூ.3,48,430 கோடியாக மட்டுமே இருந்தது. உள்நாட்டில் சோலார் பொருட்கள் உற்பத்தியை அதிகரித்து சீன இறக்குமதியைக் கட்டுப்படுத்தினால், வர்த்தகப் பற்றாக்குறையையும் கட்டுப்படுத்தலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

No comments

Powered by Blogger.