நிர்மலா சீதாராமனின் செயல் கண்டிக்கத்தக்கது!

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்தது கண்டிக்கத்தக்கது என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

டெல்லி சென்ற துணை முதல்வர் பன்னீர்செல்வம், தன்னுடைய தம்பி உடல் நலக்குறைவாக இருந்தபோது அவரை சென்னை அழைத்துவர ராணுவ ஹெலிகாப்டர் கொடுத்து உதவிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நன்றி தெரிவிக்க வந்ததாகத் தெரிவித்தார். ஆனால் நிர்மலா சீதாராமனை சந்திக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை திரும்பிய பன்னீர்செல்வத்திடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், “எதையும் தாங்கும் இதயம் வேண்டும்” என்று ஒரு வரியோடு பதிலை முடித்துக் கொண்டு கிளம்பிச் சென்றார். சந்திக்க மறுத்ததற்கு பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று (ஜூலை 27) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாபா பாண்டியராஜன், “அவசர காலத்தில்தான் ஹெலிகாப்டர் கேட்கப்பட்டுள்ளது. அதுவும் மறைமுகமாக அல்லாமல் வெளிப்படையாகத்தான் கேட்டுள்ளனர். இதில் விதிமீறல் எதுவும் நடைபெறவில்லை. தேவையில்லாமல் இது சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது. ஹெலிகாப்டர் இருந்ததென்றால் அதனை கொடுக்க வேண்டியது அவர்களுடைய கடமை” என்று விளக்கம் அளித்தார்.

தனது சகோதரருக்கு உதவியதற்கான நன்றி தெரிவிக்க துணை முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லி சென்றிருந்தார். தவறான புரிதலின் அடிப்படையிலும், தேவையற்ற அரசியல் சிக்கல் வந்துவிடும் என்ற நினைப்பிலும் நிர்மலா சீதாராமன் அவரை சந்திக்க மறுத்துள்ளதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று கூறிய அமைச்சர், ”அது மிகவும் தவறானது, கண்டிக்கத்தக்கதும்கூட. இது பன்னீர்செல்வத்திற்கு அவமானம் என்று நான் நினைக்கவில்லை. அது நிர்மலா சீதாராமனின் நற்தன்மையற்ற செயலாகவே நான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.