கருணாநிதி வீட்டில் திரைப் பிரபலங்கள்!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து காவேரி மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. அதில், “திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கருணாநிதியின் உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் கருணாநிதியை 24மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும் உடல்நிலையைக் கவனத்தில்கொண்டு, அவரை யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம்” என்றும் காவேரி மருத்துவமனை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இன்று (ஜூலை 27) காலை முதலே பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் நேரில் சென்று நலம் விசாரித்து வருகிறார்கள். அந்த வகையில் இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றி மாறன், ராம் உள்ளிட்டோர் இணைந்து கருணாநிதியைப் பார்க்கச் சென்றனர். பின் செய்தியாளர்களிடம் பாரதிராஜா பேசும் போது, “இன்றைக்கு அவர் உடல் நலம் பற்றி விசாரிக்க விரும்பினோம். நல்லா இருக்கிறார். அவர் பெரிய சரித்திரம், அதை படைத்துவிட்டுதான் செல்வார். சாதாரணமாக நமெக்கெல்லாம் விடை கொடுத்துவிட்டு போக மாட்டார். செயல் தலைவர் ஸ்டாலினை பார்த்து பேசிவிட்டு வந்திருக்கிறோம்.

ஐம்பது ஆண்டுகாலமாக ஒரு கட்சியின் தலைவராக தக்கவைத்த ஒரு தலைவன் கலைஞர் அவர்கள்தான். அதில் யாரும் நிலைத்து நின்றதில்லை, உலக சாதனை இது. இந்த மண்ணைப் பற்றி நூற்றாண்டு கடந்து பேசினாலும் கலைஞரை பதிவு செய்துதான் பேச முடியும். கட்சிகளுடன் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் இன்று எல்லோரும் பெருமைக்குரிய ஒரு தலைவராக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தலைவர் கலைஞர் அவர்கள்தான். நல்லா இருக்கிறார் அப்படீன்னு சொல்லி இருக்காங்க, நிச்சயம் நன்றாக இருப்பார் அவர் நூறாண்டு காலம் வாழ வேண்டும்” என்றார்.

இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர், “ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு இயக்கத்தின் தலைவராக இருந்து இந்திய வரலாற்றில் ஒரு மைல் கல் பதித்திருக்கிறார். அண்ணாவின் அடுக்கு மொழி பார்த்து வளர்ந்த நான், கவி மொழி அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த புதல்வன், ஐந்து முறை இந்த நாட்டிற்கு முதல்வராக இருந்த கலைஞரின் திராவிட குடும்பத்தில் பிஞ்சுப் பருவத்தில் இருந்து வளர்ந்தவன்.

எனக்கெல்லாம் குருவிற்கு குருவாக இருக்கும் அவர், இன்று ஐம்பதாண்டு வரலாற்றை கடந்து வந்திருக்கும் நிலையில், அவரது உடல் நலம் சற்று பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி கேட்டவுடன் தான் ஆடவிட்டாலும், தன் தசை ஆடும் என்று வந்த என்னை கரம்கோர்த்து ஆறுதல் அளித்தார் செயல் தலைவர். உறைக்குள் இருந்தாலும், வெளியே இருந்தாலும் வாள், வாள்தான். நான் என்றைக்கும் கலைஞரின் போர் வாள்” என்று தெரிவித்தார்.

சைதாபேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விவேக் , “திமுக தலைவர் கருணாநிதி மிகப்பெரிய ஆளுமை கொண்டவர். இளைஞர்களெல்லாம் சுறுசுறுப்பை அவரிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும். அரசியல்வாதி மட்டுமின்றி நல்ல கலைஞர், புரவலர் என பன்முகம் கொண்டவர். உலகத்தில் யாரும் கலைஞர் போல் மற்றொருவர் பிறக்க முடியாது. மிகப்பெரிய ஆளுமையுள்ள தலைவர் விரைவில் நலம் பெற வேண்டும். நேரில் பார்க்கும் சூழல் இல்லாததால் இன்னும் சந்திக்க செல்லவில்லை” என்றார்.

மேலும் நடிகர்கள் விக்ரம், ஆனந்த் ராஜ், நடிகை குஷ்பு போன்றோரும் கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.