வசூல் குறையாத கடைக்குட்டி சிங்கம்!

தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றில் அவ்வப்போது சில ஆச்சரியங்கள் நிகழ்வதுண்டு. நடிகர் சூர்யா தயாரிப்பில் அவரது தம்பி கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள கடைக்குட்டி சிங்கம் அந்த ஆச்சரியத்தை நிகழ்த்தியுள்ளது.

அதிரடி ஆக்‌ஷன் படங்கள், காதல் படங்கள், டபுள் மீனிங் படங்கள் போன்றவை ஒரு தரப்புப் பார்வையாளர்களால் வெற்றி பெற்றது வரலாறு. ஆனால் கூட்டுக் குடும்பம், விவசாயம் சார்ந்த திரைக்கதை கொண்ட கடைக்குட்டி சிங்கம் எந்த ஆரவார ஆர்ப்பாட்டமும் இன்றித் தியேட்டர்களின் கல்லாவை நிரப்பிவருகிறது.

கத்தி யாரிடம் இருக்கிறது, அதை எப்படி பயன்படுத்தப் போகிறோம் என்பதைப் பொறுத்து அதன் பயன்பாடு இருக்கும். அதே போன்றுதான், “ஒரு திரைப்படம் நாட்டில் ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தும்; பிரிவினைவாதம், குழப்பங்களையும் ஏற்படுத்தும்” என்றார் தமிழக முதல்வராக இருந்து மறைந்த அண்ணாதுரை. அதுபோன்ற படைப்புதான் கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் என்கின்றனர்.

மசாலா படங்களும் ஆக்‌ஷன் படங்களும் மட்டுமே கல்லா கட்டும் என்றிருந்த நிலையை மாற்றியிருக்கிறது இப்படம் என்கின்றனர் தியேட்டர் வட்டாரங்களில். படம் ரிலீஸ் ஆன முதல் இரண்டு நாட்கள் இப்படத்தின் வசூல் குறைவாகவே இருந்துள்ளது. மூன்றாம் நாள் ஜெட் வேகத்தில் அதிகரித்த வசூல் குறையாமல் ஒவ்வொரு நாளும் கூடிக் கொண்டே போகிறது.

தமிழகமே பருவ மழை பொழியாமல் வறட்சியும், தண்ணீர் தட்டுப்பாட்டிலும் தவித்துக்கொண்டிருக்க மேட்டூர் அணை ஐந்து ஆண்டுகளுக்குப் பின் நிரம்பியதற்கு இணையானது கடைக்குட்டி சிங்கத்தின் வெற்றி என்கிறார் காவிரி டெல்டா பகுதி திரையரங்க குத்தகைதாரர் திருச்சி ஸ்ரீதர். விவசாயத்தையும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையையும் வலியுறுத்தும் கடைக்குட்டி சிங்கத்திற்கு GST வரியை ரத்து செய்ய வேண்டும் என்கிறார் இவர்.

கடந்த சில வருடங்களில் காஞ்சனா-2, பாகுபலி -2 போன்ற படங்களைப் பார்க்க, தியேட்டரில் படம் பார்க்க வராதவர்கள் கூட குடும்பத்துடன் வந்தார்கள். அதே போன்ற நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் நடந்துகொண்டிருக்கிறன. தியேட்டருக்குப் படம் பார்க்க வராதவர்கள் எல்லாம் கடைக்குட்டி சிங்கம் காண வருகின்றனர்

மக்களின் மனங்களைப் பிரதிபலிக்கும் திரைப்படங்கள் தோற்பது இல்லை என்கிறார் தென் மாவட்டத்தில் உள்ள தியேட்டர் உரிமையாளர் ஒருவர். தமிழ்நாடு முழுவதும் கடைக்குட்டி சிங்கம் முதல் வார முடிவில் சுமார் 17 கோடி வரை மொத்த வசூல் ஆகியுள்ளது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

- இராமானுஜம்

No comments

Powered by Blogger.