சூர்யா படத்தில் கிரிக்கெட் வீரர்!

இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் படத்தில் கிரிக்கெட் வீரர் இணைந்துள்ளார்.

அயன், மாற்றான் திரைப்படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து படப்பிடிப்பை நடத்தி வருகிறது சூர்யா, கே.வி.ஆனந்த் கூட்டணி. படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் சாயிஷா கதாநாயகியாக நடிக்க, முக்கியமான கேரக்டரில் மோகன்லால், சமுத்திரக்கனி, ஆர்யா நடிக்கின்றனர். இவர்களுடன் பிரபல இந்தி நடிகர் போமன் இரானி வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரரும், ஒரு சில பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் நடித்திருப்பவருமான சிரக் ஜானியும் நடிக்க இருக்கிறார் என்ற தகவலை இயக்குநர் கே.வி.ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று சிரக் ஜானி பிறந்த நாள் என்பதால் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இயக்குநர் கே.வி.ஆனந்த். சிரக் ஜானி நடிக்கும் முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். கே.வி.ஆனந்துடன் இரண்டாவது முறையாக ஒளிப்பதிவில் இணைந்துள்ளார் அபிநந்தன் ராமானுஜம். இவர் ஏற்கனவே கே.வி.ஆனந்த் இயக்கிய கவண் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி கவனிக்கிறார். கலை இயக்குநராக கிரண் பணிபுரிந்து வருகிறார்.

பட்டுக்கோட்டை பிரபாகர் கதை எழுதியுள்ள இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை லண்டனில் முடித்துள்ளது படக்குழு. ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பை பல நாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த ஆண்டின் இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்து, அடுத்த ஆண்டு படத்தை வெளியிட உள்ளனர்.

No comments

Powered by Blogger.