விஸ்வரூபம் 2: மாறாத ஆஸ்கார் ரவிச்சந்திரன்

கமல்ஹாசன் கட்சி தொடங்கிய பின் அவர் நடிப்பில் வெளியாகும் முதல் படமான விஸ்வரூபம் 2 நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது.
இப்படத்தின் தமிழ்ப் பதிப்பைத் தமிழகத்தில் வெளியிட்ட ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தமிழ்ப் படத் தயாரிப்புகளில் பல சாதனைகளை நிகழ்த்தியவர். ஷங்கர் இயக்கிய ஐ, கமல்ஹாசன் நடித்த தசாவதாரம், விஐயகாந்த் நடித்த வானத்தைப் போல படங்களை தயாரித்தவர். இந்தப் படங்களை விநியோகஸ்தர்களுக்கு வியாபாரம் செய்யாமல் நேரடியாக வெளியிட்டுச் சாதனை புரிந்தவர்.
விநியோகஸ்தர்கள் மூலம் தியேட்டர்களை ஒப்பந்தம் செய்கிறபோது நிச்சயிக்கப்படுகிற அட்வான்ஸ் தொகை வரவு ஆகாத பட்சத்தில் படத்தைத் திரையிட அனுமதி கொடுப்பதில்லை. சிறிய படம், பெரிய நடிகர்கள் படம் என்கிற பாகுபாடு இன்றி இதைக் கடைப்பிடித்துவருகிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.
விஸ்வரூபம் 2 படம் ரிலீஸ் விஷயத்தில் அந்தக் கொள்கையை கடைப்பிடித்ததால் தென்னாற்காடு, மதுரை, ராமநாதபுரம் விநியோக பகுதிகளில் படம் ரிலீஸ் செய்ய ரவிச்சந்திரன் அனுமதி கொடுக்கவில்லை.
இதனால் விஸ்வரூபம் 2 படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வியாபார ரீதியாக மூன்றாவது இடத்தில் உள்ள மதுரை, கடைசி இடத்தில் உள்ள தென்னாற்காடு பகுதிகளில் நேற்றைய தினம் இப்படம் திரையிடப்பட்டிருந்தால் சுமார் 1 கோடி வசூல் ஆகியிருக்கும்.
தொடர் நஷ்டம் காரணமாகப் படத்தயாரிப்பில் தீவிரம் காட்டாத ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் சிரமமான சூழ்நிலையிலும் வியாபாரத்தில் கறார் தன்மையை இப்போதும் கடைப்பிடிப்பது திரைப்படத் துறையில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.