கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதி!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ஐக்கிய அரசு அமீரகம் சார்பில் ரூ. 700 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் தற்போது மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதுவரை 350க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவைச் சீரமைக்க நிதி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து பல்வேறு மாநில அரசுகள், கலைத்துறையைச் சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோர் தங்களால் இயன்ற நிதியை வழங்கி வருகின்றனர். கேரளாவுக்கு உலக மக்கள் நிதி வழங்க வேண்டும் என்று போப் பிரான்சிஸும் வலியுறுத்தியிருந்தார். கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் அரபு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இதனால், அரபு நாடுகளும் கேரளாவுக்கு நிதி அளித்து வருகின்றன. கத்தார் நாடு ரூ. 34 கோடியை கேரளாவுக்கு முதல் கட்ட நிதியாக வழங்குவதாக அறிவித்தது.

இதேபோல், மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு உதவும் பொறுப்பு ஐக்கிய அரபு நாடுகளில் வாழும் மக்களுக்கு உள்ளது என்று ஐக்கிய அரபு நாடுகளின் பிரதமர் ஷேக் மொஹம்மத் பின் ரஷீத் அல் மக்தும் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் கேரளாவுக்கு ரூ. 700 கோடி நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது என்ற அறிவிப்பைக் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்றைய (ஆகஸ்ட் 21 ) செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.

மேலும், கேரளாவில் மேற்கொள்ள வேண்டிய நிவாரணப் பணிகள், புனரமைப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்து விவாதிக்க ஆகஸ்ட் 30ஆம் தேதி சிறப்பு கூட்டத் தொடரை கூட்டுவது தொடர்பாக ஆளுநருக்குப் பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இன்று மாலை கேரளாவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

இதுவரை கேரளாவுக்கு மத்திய அரசு ரூ.100 கோடி வழங்கியுள்ளது. வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த பிரதமர் மோடி ரூ.500 கோடி வழங்க அறிவித்தார். இந்த நிலையில் ஐக்கிய அரசு அமீரகம் ரூ.700 கோடி அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.