வெள்ள நிவாரணத்தில் தொழில் துறையினர்!

இந்தியாவின் தொழில் துறையினரும் பெரு நிறுவனங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கான தங்களது உதவிகளை வழங்கி வருகின்றன.
இந்தியத் தொழில் துறைக் கூட்டமைப்பான சி.ஐ.ஐ., தனது முன்னாள் தலைவரான கிரிஷ் கோபால கிருஷ்ணன் தலைமையில் வெள்ள நிவாரணப் பணிக்காகச் சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழு கேரள மாநில அரசுடனும், பாதிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுடனும் இணைந்து செயல்படுகிறது. ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தின் ஊழியர்கள் பண ரீதியாகவும் ஆள் ரீதியாகவும் வெள்ள நிவாரணத்தில் தங்களது பங்களிப்பை வழங்கி வருவதாகவும், அதற்காக நிறுவனம் சார்பாக ஊக்கமளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும் தன் பங்குக்கு ரூ.1 கோடியை வெள்ள நிவாரணத் தொகையாக முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியில் செலுத்தியுள்ளது.
கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் இந்தியா சார்பாகவும் சிறப்பு அவசரக் கால நிவாரணக் குழுக்கள் அமைக்கப்பட்டு வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பேடிஎம்உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் தங்களால் இயன்ற உதவிகளைக் கேரள மழை வெள்ள நிவாரணத்துக்காக வழங்கி வருகின்றன. 300க்கு மேற்பட்ட மக்களை விழுங்கியுள்ள இந்த வெள்ள பாதிப்பு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இந்த வெள்ளத்தால் அம்மாநிலத்துக்கு ரூ.15,000 கோடி முதல் ரூ.20,000 கோடி வரையில் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. கேரளாவின் தோட்டத் தொழில், ஏற்றுமதி வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறை அனைத்தும் முடங்கியுள்ளன.
கேரள மாநிலத்துக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் உள்ள மக்கள் உதவியும் பிரார்த்தித்தும் வருகின்றனர்.

No comments

Powered by Blogger.