நான்கு கதாபாத்திரங்கள், ஒரு கதை!

செக்க சிவந்த வானம் படத்தின் நான்கு முக்கிய கதாபாத்திரங்களை விளக்கும் வகையில் புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

காற்று வெளியிடை படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கிவரும் படம் செக்க சிவந்த வானம். நடிகர்களைப் போல குறிப்பிட்ட சில இயக்குநர்களுக்கென ரசிகர் கூட்டம் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருக்கும். கடந்த முப்பது ஆண்டுகளாகத் தனது படங்களுக்கென எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் மணிரத்னம அதில் முக்கியமானவர். இந்த முறை மணிரத்னம் படத்திற்கு அதிகளவிலான எதிர்பார்ப்பு உருவாகியிருப்பதற்கான மற்றொரு காரணம் நான்கு கதாநாயகர்களை ஒரே படத்தில் இணைத்திருப்பதே ஆகும். நான்கு முக்கிய கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டே இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

அரவிந்த் சாமியை அறிமுகப்படுத்தியது மணிரத்னம் என்பதால் அவர் இந்த படத்தில் இணைந்திருப்பது எந்தவித ஆச்சர்யமும் இல்லை. ஆனால், விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய் என மூன்று கதாநாயகர்கள் முதன்முறையாக மணிரத்னம் இயக்கத்தில் இணைந்து நடிக்கின்றனர். ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் என கதாநாயகிகளின் பட்டியலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

நான்கு கதாநாயகர்களின் கதாபாத்திரம் மற்றும் படத்தில் அவர்களது தோற்றம் குறித்து விளக்கும் விதமாகப் படக்குழு தினம் ஒரு போஸ்டரை வெளியிட்டு வருகிறது. நேற்று வெளியான போஸ்டரில் அரவிந்த் சாமி ‘வரதன்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகப் படக்குழு அறிவித்தது. இன்று (ஆகஸ்ட் 14) மாலை அருண் விஜய்யின் கதாபாத்திரத்தை விளக்கும் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் அருண் விஜய் ‘தியாகு’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் சிம்பு, விஜய் சேதுபதி ஆகியோரின் போஸ்டர்கள் வெளியாக உள்ளன.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்றுவருகின்றன. செப்டம்பர் 28ஆம் தேதி படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.