தடுமாறும் இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி துவக்க விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி நேற்றைய (ஆகஸ்ட்1) முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் 9விக்கெட்டுகளை இழந்து 285ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் மேற்கொண்டு 2ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் இங்கிலாந்து அணி 287 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது இந்திய அணி. அதன்படி ஷிகர் தவன் மற்றும் முரளி விஜய் துவக்க வீரர்களாகக் களமிறங்கினர். இங்கிலாந்து பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை என்னும் காரணத்தால் இந்திய அணி மிகவும் பொறுமையான ஆட்டத்தையே கடைபிடித்தது. 13.4 ஓவரில் ஸ்கோர் 50ஆக இருந்தபோது 20 ரன்களை எடுத்திருந்த முரளிவிஜய் சாம் கரனின் பந்துவீச்சில் எல்.பி.டபுள்யூ ஆனார். அதையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல் ஆடுகளத்திற்குள் என்ட்ரி ஆனார். ஆனால் அவர் மீது இருந்த எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்யவில்லை. முதல் பந்தில் பவுண்டரி அடித்து ஆட்டத்தைத் தொடங்கிய அவர் சாம் கரனின் அடுத்த பந்திலேயே போல்டாகி 4 ரன்களுக்கு வெளியேறினார்.

இந்த விக்கெட் வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அதாவது அடுத்த 5 ரன்னை அடிப்பதற்குள்ளாகவே மற்றொரு தொடக்க வீரரான தவனின் விக்கெட்டையும் இழந்தது இந்திய அணி. 26 ரன்களை மட்டுமே எடுத்த தவன் டேவிட் மலனால் கேட்ச் செய்யப்பட்டு வெளியேறினார். இவரது விக்கெட்டையும் சாம் கரனே வீழ்த்தினார்.

இதனையடுத்து களமிறங்கிய அணித்தலைவர் கோலி நிதான ஆட்டத்தைக் கடைபிடித்தார். மற்றொரு புறம் ரஹானே அவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தார். ஆனால் இந்த இணையும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை ஸ்கோர் 100 ஆக இருந்தபோது ரஹானேவும் 15 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதையடுத்து தினேஷ் கார்த்திக்கும் டக் அவுட் ஆனார். 30 ஓவர் முடிவில் இந்திய அணி 100 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. கோலி (21) மற்றும் ஹர்திக் பாண்டியா(0) களத்தில் உள்ளனர்.

No comments

Powered by Blogger.