‘ஒரு அடார் லவ்’ நாயகிக்குப் பாலியல் தொல்லை?

ஒரு அடார் லவ் படத்தில் நடித்துள்ள மிசெல் அன் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக வெளிவந்த செய்திகளை மறுத்துள்ளார்.

ஒரு அடார் லவ் என்ற மலையாளப் படத்தில் மாணிக்ய மலராய பூவி என்ற பாடல் வெளியானது. இதில் பள்ளி மாணவியாக நடித்திருந்த பிரியா வாரியர், தனது சகமாணவன் கதாப்பாத்திரத்துடன் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அந்தப் பாடல் அமைந்திருக்கும். அதில் புருவத்தை வளைத்து இவர் செய்யும் சேஷ்டை மற்றும் கண்ணடிப்பு காட்சிகள் வைரலாக மாறி தேசிய அளவில் புகழை பெற்றுக்கொடுத்தன. ஓமர் லுலு இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியா வாரியருடன் இன்னொரு நாயகியாக நடித்திருப்பவர் மிசெல் அன். இவரது அம்மா அன்னி லிபுவும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் மிசெல் அன்னின் அம்மாவும் உறவினர்களும் அவரை கடுமையாகத் தாக்கியதாகவும், மனரீதியாக கொடுமைப் படுத்துவதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், கொன்று விடுவார்கள் என்று பயந்து மிசெல் தற்கொலைக்கு முயன்றதாகவும் செய்தி வெளியானது. இது தொடர்பாக மிசெல் கையெழுத்துடன் எர்ணாகுளத்தில் உள்ள திரிபினிதுரா காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது இந்தச் செய்தியை மறுத்துள்ளார் மிசெல். இது குறித்து மாத்ருபூமி மலையாள நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், “என் அம்மாவும் உறவினர்களும் என்னை தாக்கவில்லை. பாலியல் தொல்லை ஏதும் எனக்கு தரப்படவில்லை. இது தொடர்பான தகவல்கள் அனைத்தும் சோடிக்கப்பட்டவை” என்று கூறியுள்ளார். அவர் அம்மா அன்னி லியும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், “இந்த பொய் செய்தியால் நாங்கள் பாதிப்படைந்துள்ளோம். இது தொடர்பாக வழக்கு தொடுக்கலாம் என இருக்கிறோம். ஒரு அடார் லவ் படத்துக்கு எதிராக இப்படியொரு செய்தி கிளப்பப்படுகிறது என நினைக்கிறோம். அந்த படத்துக்கு இது எதிர்மறை விளம்பரத்தை தேடி கொடுத்துவிடும். அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை” என்று அவர்கள் கூறியுள்ளனர்.

No comments

Powered by Blogger.