தடுமாறும் இங்கிலாந்து!

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்டின் மூன்றாம் நாள் மதிய உணவு இடைவேளை வரை ரவிச்சந்திரன் அஸ்வின், இஷாந்த் ஷர்மா ஆகியோரின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியின் நேற்றைய (ஆகஸ்ட் 2) இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. சிறப்பாகப் பந்துவீசிய அஸ்வின், அலஸ்டேர் குக்கின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.இன்று (ஆகஸ்ட் 3) தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் அஸ்வின் மீண்டும் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்தார். கீட்டன் ஜென்னிங்ஸ் (8 ரன்கள்), ஜோ ரூட் (14 ரன்கள்) ஆகியோரை அஸ்வின் வெளியேற்ற, அடுத்துவந்தவர்களை இஷாந்த் ஷர்மா கவனித்துக் கொண்டார். இஷாந்தின் வேகத்தில் டாவிட் மலன் 20 ரன்களிலும், ஜானி பேர்ஸ்டோ 28 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களிலும், ஜாஸ் பட்லர் 1 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இங்கிலாந்து அணி சற்றுமுன்வரை 37 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது. இந்தியா சார்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளனர். அதில் ரஷீத் 7 ரன்களுடனும், சாம் கரன் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.தற்போது இங்கிலாந்து அணி இந்தியாவை விட 119 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. இன்னும் அந்த அணிக்கு 3 விக்கெட்டுகள் எஞ்சியிருக்கும் நிலையில் இந்திய அணிக்குச் சவாலான இலக்கை நிர்ணயிப்பதற்காக போராடி வருகிறது. ஸ்விங் மற்றும் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் வண்ணம் ஆடுகளத்தின் தன்மை மாறிவருவதால் இந்திய அணிக்கு 200 ரன்கள் என்பதே சவாலான இலக்காகக் கருதப்படுகிறது.

No comments

Powered by Blogger.